சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (ஜூலை 23) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு வணிகர் நல வாரியம் முதலமைச்சரை தலைவராகவும், வணிகவரித்துறை அமைச்சரைத் துணைத் தலைவராகவும் கொண்டு அமைக்கப்பட்டது. இந்த வாரியம் உருவாக்கப்பட்ட போது அலுவல் சாரா உறுப்பினர்களாக 20 பேர் இருந்தார்கள். கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி இந்த எண்ணிக்கை 30 நபர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வாரியம் தொடங்கப்பட்டபோது வாரியத்தின் துவக்க நிதி ரூ.2 கோடியாக இருந்தது. அது 2012ஆம் ஆண்டு ரூ.5 கோடியாகவும், 2017ஆம் ஆண்டு ரூ.10 கோடியாகவும் உயர்த்தப்பட்டது. இப்போது ரூ.4 கோடியே 5 லட்சம் திரட்டு நிதியாக கையிருப்பு உள்ளது.
மேலும், தற்போது வரை தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டம், மதிப்பு கூட்டு வரிச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற மொத்த வணிகர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 219 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாது, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இவ்வாரியத்தின் மூலமாக ஏராளமான நலத்திட்ட முன்னெடுப்புகள் செய்யப்பட்டு, இதுவரை 8 ஆயிரத்து 883 வணிகர்கள் பல்வேறு நிதி உதவிகளை பெற்றுள்ளார்கள். 3 கோடியே 29 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் இது போன்ற பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம்.