தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியாரை விமர்சிக்கும் போது அதிமுக அமைதியாக இருப்பது ஏன்? செல்வப்பெருந்தகை கேள்வி! - SELVAPERUTHAGAI

பெரியாரை அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லையா? பெரியாரை விமர்சிக்கும் போது அதிமுக அமைதி காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

பொங்கல் விழாவில் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
பொங்கல் விழாவில் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை (Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 4:36 PM IST

சென்னை தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சமத்துவ பொங்கல் விழா சென்னை தியாகராய நகர் நியூ போக் ரோடு கார்ப்பரேஷன் காலனியில் இன்று நடைபெற்றது. தென்சென்னை மத்திய மாவட்டத் தலைவர் முத்தழகன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1000 நபர்களுக்கு வேட்டி,சேலை, ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். இவ்விழாவில் பெண்கள் புதுப்பானையில் பொங்கலிட்டன்ர். மேலும் ஆடல் பாடல், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் சமஸ்கிருதம் தான் மூத்த மொழி, அது தான் உலகில் இருக்கின்ற மொழிகளில் தலைசிறந்த மொழி என்று சொல்லியவர்கள் இன்று தமிழ் மொழியை ஏற்று கொண்டு இருக்கிறார்கள். இதுதான் வரலாறு. மோடி தமிழ் மொழி பெருமை எல்லாம் பேசுகிறார். ஆனாலும் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டினுடைய பங்களிப்பு வரிப் பணத்தை பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சேர வேண்டிய உரிமைகளையும் பங்களிப்பையும் செய்யாமல் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். கல்வித்துறையை சீரழிக்க பார்க்கிறார்கள். தமிழ்நாட்டின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஒன்றிய அரசின் வஞ்சனையால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம் வழங்க முடியவில்லை.

சென்னையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம் (ETV Bharat Tamilnadu)

தமிழ்நாட்டுக்கு என்று ஒரு மரபு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு என்று கலை கலாச்சாரம், பழக்கவழக்கம் இருக்கிறது. தமிழ் தாய் வாழ்த்து நிகழ்ச்சி முடிந்த பிறகு தேசிய கீதம் பாடுவது தான் வழக்கம். இது கூட ஆளுநருக்கு தெரியவில்லை. அவமதிக்கிறார்கள் என்பது எந்த விதத்தில் நியாயம்? ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே தேர்தல் - ஒரேகலாச்சாரத்தை சட்டமன்றத்தில் திணிக்க வேண்டும் என ஆளுநர் எண்ணுகிறார். இந்த திணிப்பெல்லாம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எடுபடாது. வம்பு பண்ண வேண்டும் என்று ஆணவத்தோடும் திமிரோடும் ஆளுநர் செயல்படுகிறார்.

சென்னையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம் (ETV Bharat Tamilnadu)

அதிமுக பெரியாரை ஏற்றுக் கொள்ளவில்லையா? பெரியாரை விமர்சிக்கும் போது அதிமுகவினர் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை. பாஜகவினுடைய செயல் திட்டங்களை சீமான் நடைமுறைப்படுத்துகிறார். பாஜகவின் ஊன்றுகோலாக சீமான் இருக்கிறார். பெரியாரை விமர்சனம் செய்து விட்டு ஈரோட்டில் எப்படி வாக்கு சேகரிக்க முடியும்? எதிர் வினையை சீமான் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

மழை வெள்ள பாதிப்பு, மெட்ரோ பணிகள் ரூ.40,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய தொகை நிலுவையாக இருக்கிறது என தமிழ்நாடு அரசு சொல்கிறது. அதனை உடனே விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details