தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பரந்தூர் திட்டம் வேண்டாமென மோடியிடம் தான் விஜய் வலியுறுத்த வேண்டும்! திமுக பதிலடி! - VIJAY

பரந்தூர் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றால் விஜய் அப்படியே டெல்லிக்கு சென்று மோடியிடம் வலியுறுத்தி கூறலாம் என திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பரந்தூர் போராட்டம், தவெக தலைவர் விஜய்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பரந்தூர் போராட்டம், தவெக தலைவர் விஜய் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2025, 6:40 PM IST

பரந்தூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியை சுற்றியுள்ள மக்கள் 910 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய் பரந்தூருக்கு இன்று சென்றார்.

விஜய் கிராமத்துக்குள் செல்ல தடை விதித்த போலீசார் அவரை மண்டபத்தின் முன்பு வேனில் இருந்து பேசுவதற்கு அனுமதித்தனர்.அப்போது பேசிய தவெக தலைவர் விஜய், "பரந்தூரில் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள், 13 நீர் நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேன். இந்த முயற்சியில் உங்களுடன் உறுதியாக நிற்பேன். விமான நிலையம் என்பதை தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது என சந்தேகம் எழுப்பினார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பேச்சு குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய திமுகவின் செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "டங்க்ஸ்டன் சுரங்கத்தை சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியபோதே திமுக விவசாயிகளுக்கு ஆதரவாக தான் இருக்கிறது என அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.

திமுக எதிர்கட்சியாக இருந்த போது 8 வழிச்சாலை அல்லது வேறு ஏனைய திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட கூடாது, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை கொடுத்து விட்டு தான் நிலத்தை எடுக்க வேண்டும் என கூறினோமே தவிர, 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என கூறவில்லை.

விமான நிலையத்திற்கு 4 இடங்களை தேர்வு செய்து கொடுத்தோம். அதில் மத்திய அரசு ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளது. 4 ஆயிரம் ஏக்கரில் பெரும்பாலான இடங்கள் அரசு புறம்போக்கு நிலமாக தான் உள்ளன. இதில் ஆயிரம் ஏக்கருக்குள் தான் விவசாய நிலங்களாக உள்ளன. அதனால் விவசாயிகளிடம் பேசி வருகின்றோம். விவசாயிகளிடம் ஒப்புதல் வாங்கி தான் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் மாற்று நடவடிக்கை எடுத்து விமான நிலையம் வரும் போது அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி விவசாயிகள் ஏற்றுக்கொண்ட பிறகு தான் இதை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் கவனமாக உள்ளார். எனவே மக்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். விவசாயிகளுக்கு விரோதமாக திமுக எப்போதும் செல்லாது.

பரந்தூர் சென்ற தவெக தலைவர் விஜய் அப்படியே டெல்லி பறந்து போய் பிரதமரிடம், மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூறலாம். அதற்கும் திமுக தயராக தான் உள்ளது. நீர்நிலைகள் அழிக்கப்படுகிறது என கூறினால் இன்று சென்னையே இருக்காது. 140 ஏரி நீர்நிலைகள் தான் இன்று வாழ்விடமாக மாறியுள்ளது. விஜய் வீடு இருக்கும் இடம் கூட நீர்நிலைகள் இருந்த இடம் ஆக தான் உள்ளது. மக்கள்தொகை பெருக்கம், மக்களின் வாழ்வாதாரம் விரிவடையும் போது தவிர்க்க முடியாதது.

விமான நிலையம் அமைப்பதை தாண்டி அதில் என்ன லாபம் உள்ளது என்பதை விஜய் தான் கூற வேண்டும். லாபம் நஷ்டம் அவருக்கு தானே தெரியும். அரசியலுக்கு வரும் போதே எனக்கு நஷ்டம் தான். ஆனாலும் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். அரசியல் என்பது லாபம் நஷ்டம் கணக்கல்ல, விமானநிலையங்கள் மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ளது. அப்போது விஜய் கூறுவதை பார்த்தால் நரேந்திர மோடிக்கும், மத்திய பாஜக அரசிற்கும் இதில் லாபம் இருக்குமானால் அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு அடி நிலம் என்றாலும் விவசாயி விட்டுக் கொடுக்க உணர்வுப்பூர்வமாக ஒத்துவரமாட்டார்கள். அந்த நிலம் அவர்களது தாய் போல உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதை உடனடியாக தூக்கி எறிய முடியாது. மக்கள் ஏற்க்கும் வரை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details