சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜூன் 20ஆம் தேதி தொடங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
சபாநாயகர் அப்பாவு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூடும். ரூல்ஸ் கமிட்டியில் முடிவு எடுத்த பின், 22ஆம் தேதியில் இருந்து காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கும். மீண்டும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளோம். இறுதி நாள் மட்டும் மாலையில் சட்டப்பேரவை நிகழ்வு இல்லை.
நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கிட்டத்தட்ட 16 அமர்வுகள் இருக்கும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால், ஜூன் 24ஆம் தேதி நடைபெற இருந்த சட்டப்பேரவை முன்கூட்டியே நடத்தப்படுகிறது. இடைத்தேர்தல் காரணமாக காலை, மாலை என இரண்டு வேளையிலும் சட்டப்பேரவை நடத்தப்படுகிறது. இந்த முடிவு அனைத்து கட்சியினரும் சேர்ந்து எடுத்த முடிவு தான். நாடாளுமன்றத் தேர்தலின் போதே விக்கிரவாண்டி தேர்தலும் வைத்திருக்கலாம்.
அப்படி வைக்காமல் இருந்ததால் தான் இந்த பிரச்சினை வருகிறது. 45 முதல் 50 நாட்கள் தேர்தல் நடக்கிறது. அப்போதே இந்த தேர்தலும் நடத்தி இருக்கலாம். தற்பொழுது மீண்டும் தேர்தல் நடைமுறைகள் வருகிறது” என்றார். இதன் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மொத்தமாக ஒன்பது நாட்கள் தான் சட்டப்பேரவை நடத்த இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளில் 100 நாட்கள் சட்டமன்றம் நடத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். எப்பொழுதுமே 40-லிருந்து 50 நாள் சட்டப்பேரவை நடைபெறும் நிலையில், மிகக் குறைவாகவே சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்த இருக்கிறார்கள். இதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இடைத்தேர்தலை காரணம் காண்பிக்கிறார்கள்.
இடைத்தேர்தல் முடிந்தவுடன் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியது போல், சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் குறிப்பிட்ட காட்சி மட்டும் ஒளிபரப்பு செய்கிறார்கள். இனி வரும் காலங்களில் 100 நாட்கள் சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துளோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க:மேடையில் கடுகடுத்த அமித்ஷா! தடுமாறிய தமிழிசை! என்ன நடக்கிறது பாஜகவில்? - Amitshah and Tamilisai