சென்னை:திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் உள்ள ரயில்வே கேட் பாதை, அப்பகுதியின் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பிரதான வழித்தடமாக அமைந்துள்ளது. அதன்படி, அந்த வழித்தடத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
அண்ணாமலை நகர் மக்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) சென்னையின் முக்கிய ரயில் வழித்தடமாக இருக்கும் இந்த வழித்தடத்தில் சென்ட்ரலில் இருந்து வட மாநிலத்திற்குச் செல்லக்கூடிய விரைவு ரயில்கள், அதேபோல் சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை வரை செல்லக்கூடிய மின்சார ரயில்கள் அதிக அளவில் செல்கிறது. இதன் காரணமாக அதிக நேரம் ரயில்வே கேட் மூடப்படும் நிலை ஏற்படுவதால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.
இதற்காக அந்தப் பகுதியில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணியை கடந்த 2022ஆம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. இதற்காக ரயில்வே கேட் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தை ரயில்வே துறை கையகப்படுத்தியது.
இரண்டு ஆண்டுகளாக பணிகள் ஏதும் நடைபெறாத நிலையில், கடந்த மாதம் ரயில்வே துறை சார்பில் சுரங்கப் பாதைக்காக பள்ளம் தோண்டப்பட்டு இரும்புத் தகடுகள் அமைத்து பணிகள் நடைபெற தொடங்கியுள்ளது. ஆனால், சுரங்கப்பாதை துவங்கி முடியும் எதிர்புறத்தில் உள்ள நிலத்தையும் கையகப்படுத்தப்படாமல் உள்ளதால், இந்த சுரங்கப்பாதை பணி எப்போது நிறைவு பெறும் என்றே தெரியாத சூழல் உள்ளது.
மக்கள் சந்திக்கும் சவால்:அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள ரயில்வே கேட் செயல்படாததால் இருபுறமும் உள்ள பகுதியில் உள்ள மக்கள் ரயில்கள் வரும் போது தண்டவாளத்தை ஆபத்தான வகையில் சைக்கிளை தூக்கிக் கொண்டும், நடந்தும் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி செல்வதால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
மக்கள் பணிகளுக்குச் செல்வதற்கும், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளை கடப்பது போல சர்வ சாதரணமாக ரயில்கள் வரும் போது மக்கள் தண்டவாளத்தைக் கடந்து செல்வதை பார்க்கும் போது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
பெற்றோர் கோரிக்கை: இந்நிலையில், "2022ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தினாலும் தற்போது தான் பணிகள் துவங்கியுள்ளனர். பணி நடைபெற்று முடியும் வரை மாற்றுப்பாதை தயார் செய்து தர வேண்டும், பிள்ளைகளை விளையாடிக் கொண்டே தண்டவாளத்தைக் கடப்பதால் தனியாக பள்ளிக்கு அனுப்புவதற்க்கு பயமாக உள்ளது, விரைவாக சுரங்கப் பாதையை முடித்து தர வேண்டும்" என பெற்றோர் எழில் வேலன் தெரிவித்தார்.
இதேபோல, "பள்ளிக்குச் சென்று குழந்தைகளை அழைத்து வர இந்த வழியே முதன்மையான வழியாக உள்ளது. மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், இந்த பகுதியில் யாரேனும் மரணித்தாலும் 5 கிலோ மீட்டர் வரை சுற்றி அவர்களின் இறுதி ஊர்வலம் நடத்த வேண்டியுள்ளது. மின் விளக்குகள் இங்கு இல்லாததால் இரவு நேரங்களில் ரயில்வே கேட் வழியாக வர முடியாது" என பெற்றோர் சசிகலா வேதனை தெரிவித்தார்.
"ரயில் ஓட்டுநர்கள் தூரத்தில் இருந்து ஹாரனை அடிப்பதில்லை. நாங்கள் கடக்கப் போகும் நேரத்தில் பக்கத்தில் வந்த பிறகு அடிக்கிறார்கள். வேறு வழியாகச் செல்ல வேண்டும் என்றால் 4 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டும். அவையும் சிறிய பாதையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, இந்த ஆபத்தான பாதையை கடக்கிறோம் விரைவாக சுரங்கப்பாதை பணியை முடித்து தர வேண்டும்" என பெற்றோர் திலகவதி தெரிவித்தார்.
மேலும், "பள்ளிப்பைகளை தூக்கிக் கொண்டு இந்த ரயில் தண்டவாளத்தை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது. வேறு வழியாகச் சென்றால் மிகவும் தாமதமாகும் என்பதால், இந்த வழியை நாங்கள் பயன்படுத்துகிறோம். இது சென்னை ரயில் பாதை போன்று இல்லாமல் உள்ளது" என மாணவர் பவனேஷ் குமார் தெரிவித்தார்.
18 மாதங்களில் முடிக்க வேண்டிய சுரங்கப்பாதை பணிகள் 24 மாதங்கள் கடந்து நடைபெற்று வருவதால், அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, விரைவாக இந்த சுரங்கப்பாதை பணியை முடித்து தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வேலூர் அருகே ஒரு ஊருக்கே டெங்கு, டைபாய்டு பாதிப்பு.. அச்சத்தில் மக்கள்! - vellore people on typhoid affection