சென்னை: குவைத் நாட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 178 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாரூக் (42) என்ற பயணி, தனது இருக்கையை விட்டு அடிக்கடி எழுந்து, விமான கழிவறைக்கு சென்று வந்தார்.
அப்போது அவரிடம் புகை பிடித்ததற்கான வாசனை வீசியது. இதை சக பயணிகள், விமான பணிப்பெண்ணிடம் தெரிவித்தனர். இதை அடுத்து விமான பணிப்பெண்கள், பயணி ஃபாரூக்கை விசாரித்தனர். அப்போது அவர், நான் புகை பிடிக்கவில்லை என்றும் சகப் பயணிகள் என் மீது வீண் பழி சுமத்துகின்றனர் என்றும் கூறினார். ஆனால் அவர் வாயிலிருந்து புகை பிடித்ததற்கான வாசனை வந்து கொண்டு இருந்தது.
இதை அடுத்து விமான பணிப்பெண்கள், தலைமை விமானியிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அனுப்பி, பாதுகாப்பு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி விமானம் நேற்று மதியம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தரை இறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி ஃபாரூக்கை சுற்றி வளைத்து பிடித்து, பாதுகாப்புடன் சுங்க சோதனை மற்றும் குடியுரிமை சோதனைகளை முடித்துவிட்டு, விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.