தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர் சுகாதார பணி அலுவலகத்தில் தீ விபத்து; லட்சங்கள் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்! - TIRUVALLUR FIRE ACCIDENT

திருவள்ளூர் மாவட்ட சுகாதார பணிகள் நடைபெறும் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து வீணாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்தில் பொருட்கள் எரிந்துள்ள காட்சி
தீ விபத்தில் பொருட்கள் எரிந்துள்ள காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 3:45 PM IST

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கணினி, ஏசி, பிரிண்டர் உள்ளிட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும், மாவட்டத்தில் உள்ள மக்களின் மருத்துவ குறிப்புகளும் எரிந்து நாசமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தின் சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் வடக்கு ராஜ வீதியில் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அலுவலகத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 6) வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல் பணிகளை முடித்து அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டிச் சென்றுள்ளனர்.

ஆனால், திடீரென இன்று (டிசம்பர் 7) காலை 6.30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து புகை வந்துள்ளது. அதனைக் கண்ட அலுவலகத்தின் இரவு காவலர், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால், அதற்கு தீ அலுவலகத்தில் பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அலுவலகத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயைப் போராடி அணைத்துள்ளனர்.

திருவள்ளூர் சுகாதார பணி அலுவலகத்தில் தீ விபத்து (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், தீ விபத்து நடந்த அலுவலகம் மாவட்டம் மலேரியா அலுவலர் மதியழகன் அலுவலகம் என்பதும், அதில் அலுவலகத்திலிருந்த 8க்கும் மேற்பட்ட கணினி, 3க்கும் மேற்பட்ட ஏசி, பிரிண்டர் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து வீணாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கவரப்பேட்டை ரயில் விபத்து: "குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்" - ரயில்வே டிஜிபி தகவல்!

மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மலேரியா விவரங்கள் குறித்த ஆவணங்கள் முழுமையாக தீயில் கருகி உள்ளதால், மீண்டும் மலேரியா விவரங்களை சேகரிப்பது மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு ஒரு சவாலாகவே இருக்கும் எனவும், இதனால் மலேரியா குறித்த பொதுமக்களின் விவரங்கள் அடிப்படையில் நோய்களுக்கு தீர்வு கொடுப்பது கடினமாக இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு, ஆவணங்கள், கணினி உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details