தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள சுங்கச்சாவடியை இடிக்க அதிகாரிகள் தயங்குவது ஏன்?" பொதுமக்கள் ஆவேசம்! - Velampatti toll plaza issue

Velampatti Toll Plaza Issue: வேலம்பட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட சுங்கச்சாவடியை இடிக்கும் பணி இன்று நிறுத்தப்பட்டதை அடுத்து ஊர்மக்கள் போராட்டத்தில் இறங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட சுங்கச்சாவடி அகற்றும் பணி
நிறுத்தப்பட்ட சுங்கச்சாவடி அகற்றும் பணி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 9:10 PM IST

திருப்பூர்:திருப்பூரில்- தாராபுரம் சாலையில் வேலம்பட்டி எனும் பகுதியில் குட்டையை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி மையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த சுங்கச்சாவடி மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், சுங்கச்சாவடி கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஊர்மக்கள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதனை தொடர்ந்து நேற்று விவசாயிகள் கோரிக்கையை தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டிடத்தை இடித்து அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இன்று சுங்கச்சாவடி கட்டடம் இடிக்கப்படும் என ஏராளமான விவசாயிகள் அப்பகுதியில் ஒன்று திரண்டு இருந்த நிலையில் பொக்லின் இந்திரம் வரவழைக்கப்பட்டது.

போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரெனால்ட் ஷெல்டன் பெர்ணான்டஸ் இன்று நடவடிக்கை எடுக்கப்படாது எனவும், மாவட்ட ஆட்சியர் மற்றொரு நாளில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக கூறி பொக்லின் இயந்திரத்தை அப்புறப்படுத்த முயன்றார்.

இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மணிநேர போராட்டத்துக்கு பிறகு ஆவேசமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சித்தலைவர் மலையாண்டவர் நடராஜ் தலைமையில் சுங்கச்சாவடி கட்டிடத்தை இடிக்க முற்பட்டனர். இதில் கட்டிடம் இடிக்க தொடங்கும் போதே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான போலீசார் இடிப்பதை தடுக்க முயன்றனனர்.

இதனால் போலீசாருக்கும் சுங்கச்சாவடி எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிதளவே கட்டிடம் இடிக்கப்பட்டு இருந்த நிலையில், போலீசார் அப்பணியை தடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மீண்டும் சுங்கச்சாவடி கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். அப்போது ஒரு குழு போராட்டத்தில் ஈடுபட இன்னொரு குழு மாவட்ட ஆட்சியரை காண கிளம்பி சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இது குறித்து ஊராட்சி தலைவர் மலையாண்டவர் நடராஜ் கூறுகையில், “சுங்கச்சாவடியை இடிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் கடிதம் வழங்கியதையடுத்து, இங்கு அதற்கான ஏற்பாடுகளை செய்தோம். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் இதை தடுக்கிறார். தொடர்ச்சியாக இதை இடிப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்துவோம்” என்றார்.

சுங்கச்சாவடி இடிக்க நேற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு வழங்கிய நிலையில், இந்தப்பணி நிறுத்தப்பட்டது குறித்து வருவாய்த் துறையில் விசாரித்ததில், “மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வேலம்பட்டி சுங்கச்சாவடியை இடிக்க ஆணையிட்டார். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சித்தலைவரை மட்டும் அழைத்துக் கொண்டு சென்று இடிக்கும் பணிகளில் ஈடுபட்டார். காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினரை ஒருங்கிணைப்பு செய்யாததால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் இப்பணி நிறுத்தப்பட்டது. வேறு ஒரு நாள் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இடிக்கப்படும்” என அரசுத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கப்பலூர் சுங்கச்சாவடி; உள்ளூர் மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் மூர்த்தி!

ABOUT THE AUTHOR

...view details