தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே மாவட்டத்தில் 5 மக்களவைத் தொகுதிகள்; அல்லல்படும் திருப்பூர் மக்கள்... மறுசீரமைப்பில் மாற்றம் கொண்டுவரக் கோரிக்கை! - Tiruppur Constituency Issue

Tiruppur Lok Sabha Constituency Issue: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி என 5 மக்களவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மக்களவைத் தொகுதியைச் சீரமைக்க வேண்டும் என திருப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 3:51 PM IST

ஒரே மாவட்டத்தில் 5 மக்களவைத் தொகுதிகள்; அல்லல்படும் திருப்பூர் மக்கள்... மறுசீரமைப்பில் மாற்றம் கொண்டுவரக் கோரிக்கை!

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மற்றும் பொள்ளாச்சி என 5 மக்களவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளதால், மக்களவை உறுப்பினர்களின் திட்டங்களைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், அவற்றைக் களைய திருப்பூர் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மக்களவைத் தொகுதியைச் சீரமைக்க வேண்டும் என திருப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி:தமிழ்நாட்டின் 7வது பெரிய நகரமாக இருக்கக்கூடிய திருப்பூர் நகரத்தை மையப்படுத்திக் கடந்த 40 ஆண்டுகளில் பனியன் தொழில் பெருமளவு வளர்ந்திருக்கிறது. இதனால் கடந்த 2009 முதல் மாநகராட்சியாகவும், அதைத் தொடர்ந்து மாவட்டமாகத் தரம் உயர்த்தப்பட்ட திருப்பூரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பனியன் தொழிலாளர்கள் வசிக்கிறார்கள்.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 20 லட்சம் பேரில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், 2 லட்சம் வெளி மாவட்ட தொழிலாளர்கள், 4 லட்சம் உள்ளூர் தொழிலாளர்கள் என திருப்பூரின் பனியன் தொழிலைச் சார்ந்து மட்டும் 10 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இப்படி வந்தோரை வாழவைக்கும் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

ஆனால், திருப்பூர் மாவட்ட மக்கள், அரசியல்வாதிகள், தேர்தல் அதிகாரிகள் என அனைவரையுமே அல்லல்பட வைக்கிறது இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் அமைப்பு. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே திருப்பூர் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஒரு மாவட்டத்தில் 5 மக்களவைத் தொகுதிகள்:ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையம், பெருந்துறை, அந்தியூர், பவானி சட்டமன்றத் தொகுதிகள் திருப்பூர் மக்களவை தொகுதியில் இடம்பெறுகின்றன. பெயர் திருப்பூர் தொகுதி என்று இருந்தாலும், இது பழைய கோபிச்செட்டிபாளையம் தொகுதி தான் என்று தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதனால் திருப்பூர் தொகுதியில் தேர்வாகிற மக்களவை உறுப்பினர்கள், திருப்பூர் மாநகரப் பகுதிகளான திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளை விட்டுவிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கே முக்கியத்துவம் அளித்து திட்டங்களை அளிக்கிறார்கள் என மக்களிடம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல திருப்பூர் மாநகரின் 10 வார்டுகளையும், பல்லடம் நகராட்சியையும் உள்ளடக்கிய பல்லடம் சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இப்பகுதிகளில் உள்ள மக்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினரைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், மாநகரை ஒட்டிய பகுதியாக இருக்கிற அவிநாசி சட்டமன்றத் தொகுதி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் இடம்பெற்றுள்ளதால், அவிநாசி பகுதி மக்கள் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரையும், மக்களவைத் தொகுதியையும் சார்ந்துள்ளனர்.

இது மட்டும் இல்லாமல் தாராபுரம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிகள், ஈரோடு மக்களவைத் தொகுதியிலும், உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிகள் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளது. இப்படியாகத் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 5 மக்களவைத் தொகுதிகள் வருகின்றன. ஆனால் ஒவ்வொரு மக்களவை உறுப்பினருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் கடைக்கோடி தொகுதி மக்களாகவே இருக்கிறார்கள்.

அல்லல்படும் திருப்பூர் மக்கள்: மத்திய அரசின் திட்டங்களை நாடுவதிலும், மக்களவை உறுப்பினரைச் சந்திப்பதும் திருப்பூர் காரர்களுக்குக் கடைமடைக்குத் தண்ணீர் பாய்கிற கதையாகவே இருக்கிறது என திருப்பூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும், ஜவுளி சந்தை அமைக்க வேண்டும், தொழில் துறையுடன் தொடர்புடைய மக்களவை உறுப்பினர் வேண்டும். ஜி.எஸ்.டி., வரியைக் குறைக்க வேண்டும், பங்களாதேஷ் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு வேண்டும்.

விமான நிலையம் விரிவாக்கம் உள்படப் பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் குதறிப்போட்டது போல் 5 மக்களவைத் தொகுதிகளில் இடம்பெறுவதால், ஒருங்கிணைத்து திட்டங்களைப் பெறுவதும் சாத்திய மற்ற தாக்குகிறது. மேலும் அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கூட தேர்தல் காலங்களில் அலைக்கழிப்பு அதிகமாகத்தான் இருக்கிறது.

தேர்தல் பணிகளிலும் அவதி:குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு அருகில் வெறும் 3 கி.மீ தொலைவில் உள்ள ஆண்டிபாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், நல்லூர், முத்தணம்பாளையம், முதலிபாளையம் எல்லாம் பல்லடம் தொகுதியில் இடம்பெறுவதால் இங்கு தேர்தல் நடத்துவது எல்லாம் கோயம்புத்தூர் தொகுதியைச் சார்ந்தே இருக்கிறது. இதேபோல திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளிலும் அவதி என்ற கதையாக இருக்கிறது.

திருப்பூருக்கான பிரதிநிதித்துவம் இல்லை: மாவட்டத்தில் நடக்கிற வளர்ச்சித்திட்ட கூட்டங்களில் கூட 5 மக்களவை உறுப்பினர்களும் பங்கேற்றது ஓரிரு முறை மட்டுமே என்பதால் மாவட்ட அளவில் ஆலோசிக்கக்கூடிய திட்டங்களுக்குக் கூட மக்களவை உறுப்பினர் நிதி வருவதில் சிரமம் தொடர்கிறது. மக்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு ஏற்றார் போல் தான் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த முறை உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகள் அமைந்துள்ள விதம் என்பது திருப்பூருக்கான பிரதிநிதித்துவம் என்பது இல்லாமல் பல்வேறு தொகுதிகளைச் சார்ந்து இருக்கும்படியே அமைக்கப்பட்டு உள்ளன என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது திருப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிகள், நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள அவிநாசி சட்டமன்றத் தொகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் உள்ள பல்லடம் சட்டமன்றத் தொகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதியில் உள்ள காங்கயம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து திருப்பூர் மக்களவைத் தொகுதியாக உருவாக்க வேண்டும்.

மறுசீரமைப்பில் மாற்றம் கொண்டுவரக் கோரிக்கை: அப்போது தான் திருப்பூர் மக்களுக்கான திட்டங்கள் நேரடியாகச் சென்று சேரவும், மக்களவை உறுப்பினர்கள் திருப்பூர் மக்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது உண்மையிலும் கிடைக்கும். உடுமலை, மடத்துக்குளம் பகுதிகள் பொள்ளாச்சிக்கு அருகில் இருப்பதாலும் அந்தப்பகுதி நிலவியல், அரசியல் சூழல் தொடர்புடையதாலும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியிலேயே இருக்கலாம் என திருப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2021ம் ஆண்டின் கணக்கெடுப்பின் அடிப்படையில் வருகின்ற 2026ம் ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள தொகுதி மறுசீரமைப்பானது திருப்பூர் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:"ஜிஎஸ்டியால் பின்நோக்கி சென்ற திருப்பூர் ஜவுளித் தொழில்" - திருப்பூர் கூட்டத்தில் மத்திய அமைச்சருக்கு கமல்ஹாசன் எழுப்பிய கேள்வி! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details