திருப்பூர்: தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியாகியது. இதில், மாநிலம் முழுவதும் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 97.45 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குத் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, மொத்தம் 23 ஆயிரத்து 849 பேர் தேர்வெழுதியுள்ளனர். இதில், 23 ஆயிரத்து 242 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், திருப்பூர் பல்லடம் அருகே சேடப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மகாலட்சுமி என்ற மாணவி, பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு, பள்ளி தாளாளர் சாவித்ரி ராஜகோபால், செயலாளர் வினோதரணி ராஜகோபால், முதல்வர் விஸ்வநாதன் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும், மகாலட்சுமியுடன் படித்த சக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழ், ஆங்கிலம் இரு பாடங்களில் 2 மதிப்பெண்களைத் தவறவிட்ட மாணவி மற்ற பாடங்களில் சதம் அடித்து ஆடிட்டர் ஆவதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்தவர்கள் இளையராஜா மற்றும் மது தம்பதியினர். இவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையத்திற்கு குடிபெயர்ந்து, புகைப்படக் கலைஞர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு மகாலட்சுமி என்ற மகள் மற்றும் ஒரு மகன் இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இளையராஜா உயிரிழந்துள்ளார். இதனால், மது தனியாகத் தனது மகள் மகாலட்சுமி மற்றும் தனது மகனைப் புகைப்பட கலைஞராக பணியாற்றிப் படிக்க வைத்துள்ளார்.
திருப்பூரில் முதலிடம் பெற்ற மாணவி மகாலட்சுமி கூறுகையில், “ நடைபெற்ற பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 598 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், வணிக கணக்கியல் ஆகியவற்றில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.
மேலும், நான் முதலிடம் பெறுவதற்குக் காரணமாக இருந்த என்னுடைய பள்ளி நிறுவனம், நண்பர்கள் மற்றும் என்னை ஒற்றை ஆளாக வளர்த்த எனது தாய்க்கும் இந்த தருணத்தில் தான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆடிட்டர் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வருகிறேன். வருங்காலத்தில் ஆடிட்டர் (auditor) ஆவதே தனது லட்சியம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தை பிடித்து அசத்திய மாவட்டம் எது? - Tn 12th Result 2024