திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இந்த நகராட்சியில் மொத்தம் 123 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தூய்மைப் பணியாளர்கள் அருணை கம்ப்யூட்டர் பிரைவேட் லிமிடெட் என்ற ஒப்பந்ததாரர் மூலமாக பணி அமர்த்தப்பட்டவர்கள். இதில் ஆண் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் ஊதியமாகவும், பெண் பணியாளர்களுக்கு 280 ரூபாய் ஊதியமாகவும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று (ஜூன் 29) நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையாளர், “தூய்மைப் பணியாளர்கள் பிரச்னைக்கும் நகராட்சி ஆணையாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த பணிகள் அனைத்தும் ஒப்பந்ததாரர்கள் அடிப்படையில்தான் நடக்கின்றன. எனவே, இதுகுறித்து ஒப்பந்ததாரரை தான் கேட்க வேண்டும்” என தூய்மைப் பணியாளர்களிடம் கூறினார்.
இருப்பினும், போராட்டக்காரர்கள் செல்லாததால் நகராட்சி ஆணையாளர் ஒப்பந்ததாரரை உரிய ஆவணத்தை கொடுக்கச் செய்து, ஒப்பந்தத்தின் படி சம்பளப் பணம் வழங்கப்படும். இதுகுறித்து ஒப்பந்ததாரிடம் பேசி, வரும் திங்கட்கிழமை சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” எனக் கூறினார்.