திருப்பத்தூர்:திருப்பத்தூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பாலாறு, தொழிற்சாலைக் கழிவுகளால் மாசடைந்து காணப்படுகிறது. வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரைத் தொழிற்சாலை நிர்வாகம் பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், நேரடியாகப் பாலாற்றில் திறந்து விடுகின்றனர்.
இதனால், ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு தரைப்பாலத்தின் கீழ் ஓடும் பாலாறு நீர் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி ஓடுகிறது. மேலும், பாலாற்றில் உள்ள பல்லாயிரக்கணக்கான மீன்கள் தோல் கழிவுகளால் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலாற்றில் தோல் கழிவுநீரை விடக்கூடாது எனச் சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் பலமுறை போராடியும் பலனில்லை எனத் தெரிவிக்கின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகம் முதல் தமிழக அரசு வரை அனைத்து அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், பாலாறு என்று ஓர் ஆறு இருப்பது தெரியாமல், இருப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.