தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனி சுடுகாடு வேண்டும்.. நெல்லை ஆட்சியரிடம் திருநங்கைகள் கோரிக்கை! - TRANSGENDER GRAVEYARD DEMAND

TRANSGENDER GRAVEYARD DEMAND: திருநெல்வேலியில் திருநங்கைகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம், இறந்த திருநங்கைகளை நல்லடக்கம் செய்வதில் ஊர் மக்களுக்கும், திருநங்கைகளுக்கும் இடையே பிரச்னை ஏற்படுவதால் திருநங்கைகளுக்கென தனி சுடுகாடு அமைத்து தருமாறு மனு அளித்துள்ளனர்.

திருநங்கைகள் குறை தீர்க்கும் கூட்டம்
திருநங்கைகள் குறை தீர்க்கும் கூட்டம் (CREDITS- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 9:50 PM IST

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் உள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ’குறை தீர்க்கும் கூட்டம்' நடத்துவது வழக்கம். அந்த வகையில், இன்று (ஜூன் 27) குறை தீர்க்கும் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு முன்பாக அவர்களுக்குத் தேவையான ஆதார் அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை ஆகிய அடையாள அட்டை எடுப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், திருநெல்வேலி மாவட்டம் நரசிங்கநல்லூர் பகுதியில், திருநங்கைகளுக்கு என இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் அருகிலேயே இருக்கும் அரசு புறம்போக்கு நிலத்தில் திருநங்கைகளுக்கான தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும். பொது சுடுகாட்டில் நல்லடக்கம் செய்வதில் பல்வேறு சிக்கல்களும், பிரச்னைகளும் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாகர்கோவிலில் திருநங்கைகளுக்கு என தனி சுடுகாடு உள்ள நிலையில், எங்களுக்கும் திருநெல்வேலியில் தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் எனவும் ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருநங்கை சாம்பவி கூறுகையில், “திருநெல்வேலியில் சாதி ரீதியான பாகுபாடுகள் இன்று வரை உள்ள நிலையில், சாதி ரீதியான சுடுகாடுகள் இருக்கிறது. அதேபோல் திருநங்கைகள் இறந்த பிறகு அவர்களை பொது சுடுகாடுகளில் எரிப்பதிலும், நல்லடக்கம் செய்வதிலும் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது. எனவே, எங்களுக்கென தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களின் பாதுகாப்பு; இந்து அறநிலையத்துறைக்கு முக்கிய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details