திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் பதவி விலகல் கடிதத்தை மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவ்ராவிடம் வழங்கிய நிலையில், அந்த கடிதம் மாமன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்கான மாமன்ற சிறப்பு கூட்டம் துணை மேயர் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
நெல்லை மாநகராட்சி மாமன்றம் (Video Credit - ETV Bharat Tamilnadu) காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில், மாநகராட்சி துணை மேயர் ராஜூ, மாநகராசி ஆணையாளர் மற்றும் கவுன்சிலர்கள் வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற சிறப்பு கூட்டம் துணை மேயர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மேயரின் பதவி விலகல் கடிதம் மாமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு விடுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்த கவுன்சிலர்கள் மேஜையை தட்டி அதற்கு வரவேற்பு அளித்தனர்.
மேலும், மேயர் பதவி காலியானதாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு, பின்னர் ஆணையம் அறிவிக்கப்படும் தேதியில் தேர்தல் நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற மாநகராட்சி கூட்டம் வெறும் 3 நிமிடத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மேயரின் ராஜினாமா கடிதம் பார்வைக்கு வைக்கப்படுவதாக அறிவித்த அடுத்த நொடியே அனைத்து கவுன்சிலர்களும் மேஜையை தட்டி வரவேற்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, நெல்லை மேயர் சரவணனுக்கும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் தொடர் மோதல் வந்ததாகவும், மேலும் கட்சி தலைமை வலியுறுத்தியதலின் பெயரிலேயே அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த 2 ஆண்டுகளாகவே மேயர் சரவணனை கண்டித்து மாவட்ட மாமன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் கோஷம் எழுப்புவது, தர்ணா போராட்டத்தின் ஈடுபடுவது, ஊழல் குற்றச்சாட்டை தெரிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியில் முடிவு பெற்றது. இந்த நிலையில் மேயர் சரவணன் ராஜினாமா செய்ததை அதிகாரப்பூர்வமாக இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை கவுன்சிலர்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இன்று நடந்த கூட்டத்திற்கு சில கவுன்சிலர்கள் தாமதமாக வந்தபோது, மூன்று நிமிடத்தில் கூட்டம் முடிவு பெற்றதை அறிந்து, அதற்குள் கூட்டம் முடிந்துவிட்டதா என அங்கிருந்த மற்ற கவுன்சர்களிடம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கோவை மாநகராட்சி திமுக மேயர் கல்பனா ஆனந்த் ராஜினாமா.. பின்னணியும் சர்ச்சைகளும்!