திருநெல்வேலி: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகின. மொத்தம் 91.55 சதவீதம் பேர தேர்ச்சி பெற்றுள்ளனர். அத்துடன் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
அந்த வகையில், நெல்லையில் கை. கால் செயலிழந்து நடக்க முடியாத மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் கடினமாக படித்து 420 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். நெல்லை மீனாட்சிபுரம் அடுத்த புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்த சசிகுமார் - பாப்பம்மாள் தம்பதியின் மகன் தமிழ்செல்வம்.
இவரது தந்தை தனியார் பேக்கரி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மகன் தமிழ்செல்வம் பிறவி முதலே கை, கால்கள் செயலிழந்து நடக்க முடியாத மாற்றுத்திறனாளியாக உள்ளார். இருப்பினும், தன்னம்பிக்கையின் காரணமாக மனம் தளராது 6ஆம் வகுப்பு முதல் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ம.தி.தா. இந்து பள்ளியில் பயின்று வருகிறார்.
பெற்றோரின் உதவியுடன் தினமும் பள்ளி சென்று வந்த தமிழ்செல்வன், இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை உதவியாளர் வைத்து எழுதியிருந்தார். தனது கடின முயற்சியால் 420 மதிப்பெண்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.