திருநெல்வேலி:நெல்லைமாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றான, அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை, ஈரோட்டைச் சேர்ந்த அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் செய்து வருகிறது.
இந்நிலையில், அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோக்குமார், மேலாளர் சக்திவேல் மற்றும் ஊழியர்கள் ஆனந்த்பாபு, முகமது உனீஸ் ஆகியோர் நேற்று (பிப்.5) மாலை, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவைச் சந்தித்து, அவருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் லஞ்சம் கொடுக்க வந்ததை அறிந்த ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், அவர்கள் முன்னிலையில், மாநகர காவல் ஆணையர் மூர்த்தியை தொடர்பு கொண்டு, மாநகராட்சி அலுவலகத்திற்கு லஞ்சம் கொடுக்க வந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பாக, தனியார் நிறுவன இயக்குனர் அசோக்குமார் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்திற்கு காவல் ஆணையாளர் மூர்த்தி உத்தரவின்படி வந்த திருநெல்வேலி சந்திப்பு போலீசார், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த அந்நிறுவன ஊழியர்களான சக்திவேல், ஆனந்த்பாபு, முகமது உனீஸ் ஆகிய மூன்று பேர் மீது 7A 12 ஊழல் தடுப்பு (7A 12 Prevention of corruption) என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்திற்கு எதற்காக சென்றனர், கையூட்டு கொடுக்கப்பட்டது உண்மையா என்று போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் தனியார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அசோக்குமார் என்பவரை போலீசார் தேடி வந்தனர். தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் அலுவலக வளாகம் மற்றும் ஆணையாளர் அறையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.