திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தைச் சேர்ந்த தீபக் ராஜா, கடந்த மே 20ஆம் தேதி பாளையங்கோட்டை அடுத்த கேடிசி நகரில் உள்ள ஹோட்டல் முன்பு ஆறு பேர் கொண்ட கும்பலால் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்துள்ளது.
எனவே, தனது வருங்கால மனைவி கேட்டுக் கொண்டதன் பேரில், சம்பவத்தன்று தீபக் ராஜா தனது காதலி மற்றும் அவரது தோழிகளுக்கு திருமண பார்ட்டி கொடுப்பதற்காக அந்த ஓட்டலுக்கு வந்துள்ளார். இதனையடுத்து, அனைவரும் உணவு அருந்திவிட்டு இறுதியாக ஐஸ்கிரீம் சாப்பிடும்போது தீபக் ராஜா மட்டும் காரை எடுப்பதற்காக ஓட்டலுக்கு வெளியே தனியாகச் சென்றுள்ளார். அப்போதுதான் அவரை எதிர்பார்த்து வெளியே காத்திருந்த மர்ம கும்பல், அவரை ஓட ஓட விரட்டி முகத்தை மட்டும் குறி வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளது.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர காவல் ஆணையர் மூர்த்தி உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபக் ராஜா மீது இரண்டு இரட்டை கொலை வழக்கு உட்பட பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பழிக்குப் பழியாக தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினர்.
மேலும், தீபக் ராஜாவை கொலை செய்த கும்பல் சர்வ சாதாரணமாக கையில் ஆயுதங்களுடன் அங்கிருந்து சிகப்பு நிற கார் ஒன்றில் தப்பி ஓடியது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. எனவே, அந்த கார் நம்பரை வைத்து தொழில்நுட்ப உதவியோடு அந்த கார் எங்கே சென்றது என்று ஆய்வு செய்துள்ளனர். அதில் மர்ம கும்பல் சென்ற கார் மதுரை - திருச்சி வழியாக சென்னை நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக நெல்லை முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ஐயப்பன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு ஐயப்பன், நெல்லையைச் சேர்ந்த முத்து சரவணன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பான் ஆகிய நான்கு பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், நான்கு பேரும் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் மூர்த்தியை ஈடிவி பாரத் ஊடகம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, “தீபக் ராஜா கொலை வழக்கில் இதுவரை நான்கு பேரை கைது செய்துள்ளோம். இந்த நான்கு பேரும் நேரடியாக கொலையில் ஈடுபடவில்லை. மொத்த கும்பலில் இவர்களும் இருந்துள்ளனர். நான்கு பேரில் ஒருவருக்கு மட்டுமே தீபக் ராஜாவை கொலை செய்யும் விஷயம் தெரிந்துள்ளது. ஆனால், அவருக்கும் என்ன காரணத்திற்காக கொலை செய்யப் போகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இதனால் கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து தப்பி ஓடிய மற்ற குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். ஏற்கனவே கூறியபடி ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் தமிழ்நாடு முழுவதும் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். குற்றவாளிகள் தப்பிச் சென்ற கார் மதுரை வரை செல்வதை எங்கள் குழு கண்காணித்துள்ளது. அதன் பிறகு அவர்கள் எங்கே சென்றார்கள் என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
அதாவது சம்பவத்தன்று தீபக் ராஜாவை கொலை செய்த ஆறு பேருடன் சேர்ந்து 10க்கும் மேற்பட்டோர் கும்பலாக சம்பந்தப்பட்ட ஓட்டலைச் சுற்றி வளைத்துள்ளனர். அதில் ஆறு பேர் மட்டுமே கையில் ஆயுதம் ஏந்தி தீபக் ராஜாவை கொலை செய்துள்ளனர் என்றும், தற்போது கைதான நான்கு பேரும் தீபக் ராஜாவின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:தோழியின் சதி.. தீபக் ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை.. முழு பின்னணி! - Deepak Raja Murder Case