திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி 36வது வார்டு மாமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த சின்னத்தாய், தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது வார்டில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனியார் நபரிடம் பொதுமக்களுக்கு விநியோகம் வழங்கும் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது முதல் தொடர்ந்து நான் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறேன்.
மேலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தனது சொந்தக் கட்சியினரிடையே சாதியப் பாகுபாடு தலைவிரித்து ஆடுகிறது. இவர்களுடன் இணைந்து மக்களுக்குத் தேவையான பணிகளைச் செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி, தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போதும், சொந்தக் கட்சியினரால் அவமானப்பட்டதாக” கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ராஜினாமா கடிதத்தை ஆன்லைன் மூலமாக மேயர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோருக்கு அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப், மாமன்ற உறுப்பினர் சின்னத்தாய் மற்றும் அவரது கணவர் கிருஷ்ணன் ஆகியோரை அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.