தூத்துக்குடி:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சுமார் 2 மணி நேரமாக பக்தர்கள் காத்திருந்து வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்று வருகிறது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. விசாகத்தை முன்னிட்டு, தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டபோதிலும் போதிய அளவு பேருந்து வசதி இல்லாததால் தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி பகுதிகளுக்குச் செல்லக்கூடிய பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரமாக பேருந்து நிலையத்தில் காத்திருந்து வருகின்றனர். மேலும், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருந்ததால், போதிய வாகனங்கள் நிற்கும் இடம் இல்லாததால் நகர் பகுதியில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தேனி: ஸ்ரீ மது ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் விழா - Kathi Podum Festival In Theni