தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தேர்தலில் தோற்றாலும் கமலா ஹாரிஸ் எங்களுக்கு எப்போதும் அதிபர் தான்" - துளசேந்திரபுரம் மக்கள் நெகிழ்ச்சி!

கமலா ஹாரிஸ் தேர்தலில் தோற்றாலும் தங்களுக்கு அவர் எப்போதும் அதிபர்தான் என்று அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரம் மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்புக்கும் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

US PRESIDENTIAL ELECTION 2024
கமலா ஹாரிஸ் மற்றும் துளசேந்திரபுரம் கிராம மக்கள் (Credits - AP Photo and ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 9:21 PM IST

திருவாரூர்:உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய நாட்டின் நேரப்படி நேற்று (நவ.05) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் போட்டியிட்டனர்.

எலக்ட்டோரல் காலேஜ் முறையில் நடைபெற்ற இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், அமெரிக்காவில் மொத்தமுள்ள 538 எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெறுவார்.

அதன்படி, ட்ரம்ப் 277 எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 224 எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளையும் பெற்றுள்ளதன் அடிப்படையில் ட்ரம்ப் மீண்டும் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கவுள்ளார்.

துளசேந்திரபுரம் கிராமத்தினர் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu)

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்ட நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வ கோயிலில் அவர் வெற்றி பெற சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால், கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து துளசேந்திரபுரத்தைச் சேர்ந்த அன்பரசு என்பவர் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "கமலா ஹாரிஸுனுடைய தாத்தா, அம்மா என அவருடைய முன்னோர்கள் எல்லோரும் இங்குதான் இருந்தார்கள். படித்து முடித்திவிட்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தாலும், இன்னும் இந்த ஊர் முன்னேற்றத்திலும், கோயில் முன்னேற்றத்திலும் அவர்களது பங்கு இன்றளவும் உள்ளது. இன்று வெளியான தேர்தல் முடிவுகள் காலையில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

இதனால், கமலா ஹாரிஸ் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி நேரத்தில் தோல்வியடைந்துள்ளார். இது இந்த கிராம மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாளும் கமலா ஹாரிஸை நாங்கள் அமெரிக்காவின் அதிபராகதான் பார்க்கிறோம். அதே வேலையில், வெற்றிபெற்ற டிரம்புக்கு வாழ்த்துகள். அவரது முந்தைய ஆட்சிபோல இந்த ஆட்சி இருக்காது என நம்புகிறோம்.

இதையும் படிங்க:நான் தான் அமெரிக்க அதிபர்; உற்சாகத்தில் டிரம்ப் - எலக்டோரல் காலேஜ் இவரை எப்படி தேர்ந்தெடுத்தது?

மேலும், மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அதேபோல இஸ்ரேல் போரையும் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்; மற்ற நாடுகளுடனான வணிக தொடைபு மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதை நாங்கள் அவரிடம் கோரிக்கையாக முன்வைக்கிறோம்" என்று கோரிக்கை விடுத்தார்.

துளசேந்திரபுரத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலர் சுதாகர் பேசுகையில், "அமெரிக்க அதிபர் தேர்தலை இன்று உலக நாடுகளே உன்னிப்பாக கவனித்தது. வெற்றியோ தோல்வியோ வீரனுக்கு அழகு என்பார்கள். அதுபோல, இன்று கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தாலும், வெற்றி பெற்ற டிரம்புக்கு இணையாக வாக்குகளை பெற்றுள்ளார். ஆகவே எங்களது கிராமத்தின் சார்பில் இருவருக்குமே வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.

மேலும் அமெரிக்காவை சேர்ந்த கமலா ஹாரிஸின் ஆதரவாளரான ஜாய் கூறுகையில், "அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சிறந்த வேட்பாளரான கமலா ஹாரிஸ் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்கவில்லை. சில நேரங்களில் நமது விருப்பப்படி வெற்றி கிடைக்கும், சில நேரங்களில் தோல்வி கிடைக்கும் அதுபோலத்தான் இதுவும். இருந்தாலும், டிரம்புகாக எனது பிரார்த்தனைகள் இருக்கிறது. அதேபோல உலக நாடுகளின் ஒற்றுமைக்காக அவர் உழைப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamilnadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details