குணா குகையில் தடையை மீறி சென்ற இளைஞர்கள் கைது திண்டுக்கல்: இந்தியாவில் உள்ள பிரபலச் சுற்றுலா தளங்களுள் ஒன்று கொடைக்கானல். நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் கூட சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். மேலும், வரும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் பில்லர் ராக்ஸ் சாலையில் உள்ள குணா குகைக்கு வந்து பார்வையிடுவது வழக்கம்.
இந்த நிலையில் அண்மையில் வெளியான மலையாளத் திரைப்படமான 'மஞ்ச்சுமல் பாய்ஸ்', குணா குகையில் தடைமீறிச் சென்ற இளைஞர்களுள் ஒருவர் அதில் மாட்டிக் கொள்வதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் தமிழகம், கேரளா உட்படப் பல்வேறு மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து குணா குகைக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்தவகையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குணா குகைக்கு வருகை தந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பேய்களின் சமையலறையா கொடைக்கானல் குணா குகை? 'மஞ்சுமெல் பாய்ஸ்' கதை உண்மையா?
மேலும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த இடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குகைக்குச் செல்லக்கூடிய பகுதி முழுவதுமாக வனத்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து குணா குகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், குகையை மேலிருந்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இப்படம் ஏற்படுத்தியுள்ள மோகத்தால் கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய், பாரத் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூன்று பேர் வனத்துறை தரப்பில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளைத் தாண்டி, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்றதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 'மஞ்ச்சுமல் பாய்ஸ்' படப்பிடிப்பிற்காகக் கடந்த ஆண்டு இங்கு வந்த படக்குழுவினர்கள், அனுமதிக்கப்பட்ட பகுதியை விட நீண்ட தூரம் சென்று படம் எடுத்ததாகக் கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையாகக் கிளம்பியதை அடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் சென்று, தடையை மீறிச் சென்ற படக் குழுவினருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து குணா குகைப் பகுதியில் தடைமீறிச் செல்லும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழர்களை தவறாக சித்தரிக்கிறதா மஞ்சுமல் பாய்ஸ்? - வசனகர்த்தா பிரத்யேக பேட்டி