தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் யானை தந்தங்களை கடத்திய மூவர் கைது.. மாறு வேடத்தில் சென்று வனத்துறையினர் அதிரடி! - Salem ivory smuggling

smuggling ivory in Salem: சேலத்தில் யானை தந்தங்களை விற்க முயன்ற மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 6 கிலோ எடை கொண்ட தந்தங்களை வனத்துறையினர் கைப்பற்றினர்.

கைதானவர்களுடன் வனத்துறையினர்
கைதானவர்களுடன் வனத்துறையினர் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 11:40 AM IST

மேட்டூர்: சேலத்திற்கு யானை தந்தங்களை ஒரு கும்பல் கடத்தி வருவதாக வன விலங்கு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சேலம் மாவட்டம் வன பாதுகாப்பு படையினரும், மேட்டூர் வனச்சரகர் மற்றும் வன ஊழியர்களும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கோனூர் காப்பு காட்டில் உள்ள மேச்சேரி தருமபுரி சாலை தெத்திகிரிபட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் 2 யானை தந்தங்களை விற்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து வன பாதுகாப்பு படையினர் மாறுவேடத்தில் சென்று தந்தங்களை 1.5 கோடிக்கு விலை பேசினர் . இதனை அடுத்து ஆறு பேர் கும்பல் தெத்திகிரிபட்டி கரட்டில் தந்தம் மறைத்து வைத்திருக்கும் இடத்திற்கு வருமாறு கூறிவிட்டு இரண்டு டூ வீலர்களில் சென்றனர்.

மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர் முன்னிலையில் அந்த கும்பல் மண்ணில் புதைத்து வைத்திருந்த இரண்டு தந்தங்களை தோண்டி எடுத்தபோது வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். மூன்று பேர் பிடிபட்ட நிலையில் இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். மேலும், அந்தப் பகுதியில் பதுகியிருந்த மேலும் 3 தந்தம் திருடும் கும்பல் நைசாக அங்கிருந்து நழுவியது.

மேற்கொண்டு நடந்த விசாரணையில் பிடிபட்டவர்கள் பொம்மிடி மல்லாபுரத்தை சேர்ந்த சேகர், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனுரை சேர்ந்த பாலு, பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர் நத்தம் கிராமத்தை சேர்ந்த சோமசுந்தரம் ஆகியோர் என்று தெரிய வந்தது.

இந்த மூன்று பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு தந்தங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், பிடிபட்டவர்களிடம் மேட்டூர் வனச்சகர் அலுவலகத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் தப்பிய ஓடியவர்களில் முக்கிய குற்றவாளி மேச்சேரி திமிரிகோட்டையை சேர்ந்த சரவணன் என்பதும் இவருக்கு உடந்தையாக ஜலகண்டாபுரம் சின்ன கவுண்டம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார், ஏற்காடு கொண்டையனூரை சேர்ந்த ராமர், வெங்கடாசலம், எடப்பாடியைச் சேர்ந்த சின்னையன் ஆகியோர் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் முக்கிய புள்ளி சேலத்தில் பதுங்கி இருப்பதாகவும் இதில் தொடர்புடையவர்களுக்கு கேரளாவில் உள்ள தந்தம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட யானை தந்தம் சுமார் 1 ஆண்டுக்கு முன்பு மண்ணில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் 6 கிலோ எடை இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பிடிபட்ட மூவரையும் போலீசார் மேட்டூர்நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:78வது சுதந்திர தினம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details