நீலகிரி:நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் கடந்த 20ம் தேதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. வனத்துறையினர் அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் அருகில் பன்றி ஒன்றும் இறந்து கிடந்தது.
இதனையடுத்து இறந்து போன 2 புலி மற்றும் பன்றி ஆகியவற்றை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் புலியைக் கொல்ல, காட்டுப் பன்றியின் சடலத்திற்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனைச் சாப்பிட்ட புலிகள் இறந்ததாக வனத்துறையினர் உறுதி செய்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரையின்படி வனச்சரகர் ரவி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்த வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் புலிகள் இறந்து கிடந்த பகுதியிலுள்ள வசித்து வரும் பொதுமக்கள், அங்குள்ள எஸ்டேட் நிர்வாகம் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் எனப் பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சூர்யநாத் பராக் (35), அமன் கோயாலா (24), சுரேஷ் நன்வார் (25) 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் பயன்படுத்திய மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு அதில் நீக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் மீட்கப்பட்டன.