தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அய்யம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறையில் இருந்த 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் (Cello Tape) ஒட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 11ஆம் தேதி மனு அளித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், ஒரத்தாடு வட்டார கல்வி அலுவலர் தமிழ்வாணன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மாணவர்கள், சக வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவர்கள் விளையாட்டாக வாயில் செல்லோ டேப் ஒட்டியதாகவும், அதனை பள்ளியிலிருந்த ஆசிரியை ஒருவர் செல்போனில் படம் எடுத்து, அதனை பெற்றோர்களுக்கு அனுப்பியது விசாரணையில் தெரிய வந்தது.