திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, நேர்த்திக்கடன்களைச் செலுத்தி சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், இன்று சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இளைஞர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
போலீசாரின் விசாரணையில், சிவகாசி பள்ளப்பட்டியிலிருந்து சுமார் 25 பேர் குடும்பத்துடன் ஒரு வேனில் இன்று சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்துள்ளனர். தொடர்ந்து, கோயில் வளாகத்திலுள்ள பட்டவராயன் கோயில் முன்பாக ஓடும் தாமிரபரணி ஆற்றில் நீராடியுள்ளனர். இதில், முருகன் என்பவரின் மகள்களான கல்லூரி மாணவி மேனகா (18), 15 வயது பள்ளி மாணவி ஆகியோர் ஆற்றில் மூழ்கியுள்ளனர்.
இதனைப் பார்த்த அவர்களது சித்தப்பா சங்கரேஸ்வரன் (40) மற்றும் மாரிஸ்வரன் (28) ஆகிய இருவரும், அவர்களை மீட்க ஆற்றில் இறங்கியுள்ளனர். அப்போது அவர்களும் ஆற்றில் மூழ்கிய நிலையில், அங்கிருந்தவர்கள் மாரிஸ்வரனை பத்திரமாக உயிருடன் மீட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.