கோயம்புத்தூர்:கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக, கார் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் (NIA) விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூவரை இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை அழைத்து வந்துள்ளனர்.
கோவையில் கடந்த 2022ஆம் ஆண்டு டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில், கார் ஒன்று வெடித்துச் சிதறியதில், ஜி.எம் நகரைச் சார்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதையடுத்து, ஜமேசா முபின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தொடர்புடைய சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, பின்னர், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் 5 பேரை கைது செய்தனர்.