தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாட்டிக்கிட்ட பங்கு'.. காணிக்கையை எண்ணும்போதே கையாடல்.. தலைமை பெண் காவலர் உட்பட 4 பேர் கைது!

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது, திருட்டில் ஈடுபட்ட தலைமை பெண் காவலர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவிலுக்குள் சிக்கிய பெண்கள்
கோவிலுக்குள் சிக்கிய பெண்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 11:14 AM IST

தென்காசி: மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த சிவ ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையானது தன்னார்வ அமைப்புகள் மூலம் வரக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை கொண்டு ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கோவில்பட்டியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு மூலம் எண்ணும் பணியை கோவில் நிர்வாகம் மேற்கொண்டது. காணிக்கை எண்ணும் பணியின் போது திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அனைவரும் பார்க்கும் விதம் நேரலையில் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிலையில், உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய தலைமை காவலர் மகேஸ்வரி மற்றும் அவருடன் வந்த முத்துலட்சுமி, மாரியம்மாள், அனிதா உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். காணிக்கை எண்ணும் பணி துவங்கியது முதலே இவர்களின் செயல்களில் அங்கிருந்த அதிகாரிகளுக்கு சந்தேகம் எழ துவங்கியது.

இதையும் படிங்க:காதலியை 50 துண்டுகளாக வெட்டிய கறிக்கடை தொழிலாளி.. கொலைக்கு முன் பலாத்காரம்.. பதறும் க்ரைம் சீன்!

இவர்களை தீவிரமாக கண்காணிக்க துவங்கிய அதிகாரிகள் ஒரு கட்டத்தில் இவர்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எடுத்து தங்களது ஆடைக்குள் மறைத்து வைப்பதை கண்டறிந்தனர். இதனை அடுத்து தலைமைக் காவலர் மகேஸ்வரி உள்ளிட்ட நான்கு பேரையும் கோவில் நிர்வாகம் அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சிக்கிய பெண் காவலர்

அப்போது தலைமைக் காவலர் மகேஸ்வரி காணிக்கை திருடியதை ஒப்புக்கொள்ளாமல் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். இதனால் அவர்கள் நான்கு பேரையும் திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண் காவலர்கள் இருவரும் வரவழைக்கப்பட்டு திருக்கோவில் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து நீண்ட நேரம் விசாரணை நடைபெற்று வந்தது.

ஆனால், வெகு நேரமாகியும் காவல்துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல் தாமதப்படுத்தி கொண்டிருந்தனர். திருட்டில் ஈடுபட்டது தலைமை பெண் காவலர் என்பதால், இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் திருக்கோவிலின் நான்கு வாயில்களிலும் காத்திருந்தனர். இரவு நீண்ட நெடு நேரமாகியும் திருட்டில் ஈடுபட்டவர்களை கோவில் நிர்வாகமும் காவல்துறையோ வெளியில் அழைத்து வரவில்லை.

இந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் மகேஸ்வரி உள்ளிட்ட நான்கு பேரையும் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். திருட்டில் ஈடுபட்டவர்களை மிகவும் ரகசியமாக பாதுகாப்பாக காவல்துறையினர் அழைத்துச் சென்ற சம்பவம் பத்திரிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த செய்தி சேகரிப்பதற்காக முயன்ற போது, அங்கு செய்தியாளர்களை கண்டதும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன் பக்க வாயிலை அடைத்து விட்டனர். தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட தலைமை பெண் காவலர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details