சத்தியமங்கலம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (43). இவர் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியனை தொடர்பு கொண்ட நான்கு பேர் கொண்ட கும்பல், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் செம்பு கிடைத்திருப்பதாகவும், அதனை விற்று தந்தால் பல லட்ச ரூபாய் கமிஷனாக தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதை நம்பிய சுப்பிரமணியன் இரிடியம் செம்பை பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பத்தாயிரம் ரூபாய் பணம் அட்வான்ஸ் ஆக கொடுத்தால் தான் இரிடியம் செம்பை பார்க்க முடியும் என நான்கு பேரும் கூறியதை நம்பி, பணம் கொடுத்த சுப்பிரமணியனை சத்தியமங்கலம் அருகே உள்ள குமாரபாளையம் தவளகிரி ஆண்டவர் மலைக்கோயில் அருகே வருமாறு கூறியுள்ளனர்.
அங்கு சென்ற சுப்பிரமணியணிடம், இரிடியம் செம்பை காட்டிய போது அது போலியானது என தெரிய வந்த நிலையில், போலி இரிடியம் செம்பை என்னால் விற்க முடியாது, நான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பித் தருமாறு சுப்பிரமணியன் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, இரிடியம் செம்பு குறித்து வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர்.