தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, வெள்ளூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (32). இவர், வேலைக்காக கடந்த 22 ம் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, முத்துக்குமார் பேங்காங் விமான நிலையத்தில் இருந்து வாட்சப் மூலம் அவரது மனைவி சுந்தரிக்கு பேசியுள்ளார்.
விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டு சிம்கார்டு ஒன்றையும் வாங்கியுள்ளார். அங்கிருந்து கார் மூலம் ஹோட்டல் ரூமுக்கு சென்ற முத்துக்குமார், அதன் பின் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரது மனைவி சுந்தரியிடமும் பேசாமல் உள்ளார். முத்துக்குமாரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சுந்தரி 3 வயது பெண் குழந்தையுடன் வந்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அர்மேனியா நாட்டில் வேலை பார்த்து வந்த முத்துக்குமார் சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு என்று வந்த விளம்பரத்தை நம்பி DNC MASCOT CO LTD KINGDOM OF THAILAND என்ற நிறுவனத்திற்கு முத்துக்குமார் விண்ணப்பித்தார். அந்நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்ததை நம்பி முத்துக்குமார் தாய்லாந்து சென்றார். கடந்த 22 ஆம் தேதி பேங்காங்க் விமான நிலையத்தில் இறங்கினார்.
அதன் பின், காரில் ஹோட்டலுக்கு சென்ற அவர், நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததும் செல்வேன் என வாட்சப் மூலம் தொடர்பு கொண்டார். அதுதான் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும் இதுவரை இயலவில்லை. அவரது நிலை என்ன என தெரியாமல் பெண் குழந்தையுடன் தவித்து வருகிறேன். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, முத்துக்குமாரின் மனைவி கூறும்போது, ''பேங்காங்க் விமான நிலையத்தில் இறங்கியதும் முத்துக்குமார் எடுத்த போட்டோ, விமான நிலையத்தில் புதிதாக வாங்கி சிம்கார்டு, அவர் ஹோட்டல் ரூமுக்கு செல்ல பயன்படுத்திய கார் எண் போன்ற விபரங்களை ஆட்சியரிடம் அளித்துள்ளோம். இதுதொடர்பாக சென்னையில் உள்ள தூதரக அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளோம்.
அவரை தொடர்பு கொள்ள இயலாமல் குடும்பத்தினர் அனைவரும் தவித்து வருகிறோம். ஆன்லைன் மூலம் வந்த விளம்பரம் என்பதால் எங்களுக்கு பயமாக உள்ளது. இருப்பிடம் குறித்த விபரம் தெரிந்தால் போதும். அவரை கண்டுபிடித்து இந்தியாவிற்கு அழைத்து வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் முத்துக்குமாரை மீட்க உதவி செய்ய வேண்டும்'' என இவ்வாறு அவர் கூறினர்.
இதையும் படிங்க:செங்கல்பட்டில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை.. போலீஸ் தீவிர விசாரணை!