தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கோயம்புத்தூரை இணைக்கும் வகையில், மேட்டுப்பாளையம் விரைவு ரயில் மற்றும் பாலக்காடு விரைவு ரயில் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில், கூடுதல் ரயில் பெட்டிகளுடன் ரயில் நிற்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வரும் ரயில் பாதை, ரயில்களை சரிசெய்ய அமைக்கப்பட்டு வரும் பிட் லைன் பாதை, மூன்று கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ரயில் இயக்க அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்குமிடம் மற்றும் ரயில்வே பயணிகளின் வசதிக்காக செய்யப்பட வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.
இதற்காக, மதுரையில் இருந்து தனி ரயில் மூலம் தூத்துக்குடி வந்த அவர், ஆய்விற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். அதன் பின்னர், தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு கூடுதல் ரயில்கள் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.