தூத்துக்குடி:தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று (புதன்கிழமை), திருச்செந்தூர் காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, "வெயிலைக் காரணம் காட்டி, தேர்தலில் ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள். இந்த நாட்டை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். அது நம் ஒவ்வொருவரின் கடமை. அந்த கடமையைச் செய்வதற்கு, தேர்தலில் நாம் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இந்து மதத்தையும், இந்து மக்களையும் பாஜக தான் காப்பாற்றுவதாக சொல்கிறார்கள்.
பணம் இருக்கக் கூடிய இந்துக்களுக்கு மட்டும் தான் பாஜக வேலை செய்கிறது. சாதாரண, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இந்து மக்களுக்கு எதுவும் செய்யாது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நிற்கக்கூடிய கட்சி பாஜக. இட ஒதுக்கீடு இருந்தால் தான், நமது குழந்தைகள் படிக்க முடியும். நமது பிள்ளைகள் படிக்கக் கூடாது என்று நீட் தேர்வைக் கொண்டு வந்தனர்.
இப்போது, புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து, நமது குழந்தைகள் கலைக் கல்லூரிக்கு கூட செல்ல முடியாதபடி நுழைவுத் தேர்வை கொண்டு வருகின்றனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அடிமையாக வாழ்ந்தது போல, மீண்டும் ஆதிக்க சக்திகள், உயர்ந்த சாதிகள் நம் மீது ஏறி நடக்கக்கூடிய நிலையைக் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் தான் பாஜக. இதை புரிந்து கொண்டு, அத்தனை பேரும் வாக்களிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு நியாயமாக நிதியைக் கொடுக்கக் கூடிய ஒரு ஆட்சியை மத்தியில் உருவாக்க வேண்டும். பேரிடரின் போது நமக்கு நிவாரணம் கொடுக்க மனம் இருக்கக் கூடிய ஒரு ஆட்சி தான் மத்தியில் அமைய வேண்டும். மோடிக்கு இந்த தேர்தலில் சரியான பாடத்தைச் சொல்லித்தர வேண்டும். பல ஆண்டுகளாக பாஜக உடன் ஒட்டிக்கொண்டு, அவர்கள் செய்த அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருந்த அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இந்தத் தேர்தலில் நாம் ஒரு சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.