மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 14 -ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் மடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் மடாதிபதியாக 24 - வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிய பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். ஆதினத்தின் மடாதிபதி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் திமுக கட்சியினருக்கு அருள் வாழ்த்துரை வழங்கி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த செய்திக் குறிப்பில், "பாரதத் திருநாட்டின் பிரதமராக மூன்றாவது முறை தாங்கள் பதவியேற்பது உலக அளவில் அனைவரும் வியந்து போற்றும் அருஞ்சாதனை. தங்களின் நல்லாட்சிக்கும் தியான வழிபாடுகளுக்கும் இறைவன் தந்த பரிசாக இந்த வெற்றியைப் பார்ப்பதாகத் தெரிவித்தார். இந்த ஆட்சிக் காலத்திலும் தங்களின் மேலான நிர்வாகத் திறனால் நம் நாட்டின் தொழில் வளம், பொருளாதார வளம், ஆன்மீக வளம் யாவும் சிறந்து தழைக்க வேண்டுமென நமது ஆன்மார்த்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம் என்று பாஜகவிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அருள் வாழ்த்துரை வழங்கினார்.