விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட நேமூர், ஒரத்தூர், தொரவி ஆகிய கிராமங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய திருமாவளவன், “திமுகவுடன் கூட்டணி அமைத்ததன் காரணமாகவே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விசிக போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றியை பெற முடிந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் உரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
திமுக வெற்றிக்காக உழைக்கும் விசிக:இதற்கு விசிகவினர் என்றென்றும் நன்றிக் கடன்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை, சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அவரது வெற்றிக்காக விசிகவினர் கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும்.
விசிகவினரின் வாக்குகளை யாரும் வாங்கிவிட முடியாது என்ற நம்பிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உருவாக்க வேண்டும். பாஜகவை தமிழ்நாட்டில் வளர விடக்கூடாது. இதுகுறித்து அதிமுகவுக்கு கவலையில்லை.
பாஜகவிற்கு துணை நிற்கும் பாமக: விசிக தமிழ்நாட்டை ஆளும் வலிமையான கட்சி கிடையாது. ஆனால் திமுகவுக்கு இந்த நிலை இல்லை, எப்போது வேண்டுமானாலும் திமுகவுக்கு பாஜகவினரின் ஆதரவு தேவைப்படுவதாக இருக்கலாம். ஆனாலும், திமுக பாஜகவை எதிர்க்கிறது. அதன் வெற்றியில் நமது பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது.
எனவே, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற வேண்டும். அதற்கு விசிகவினர் என்றும் துணை நிற்க வேண்டும்” எனப் பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்எஸ் சிவசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:"விக்கிரவாண்டி தேர்தல் நடத்த தேவையில்லை.." - அன்புமணி ராமதாஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு! - Anbumani Ramadoss