சென்னை:தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், இந்த சந்திப்பின் போது திருமாவளவன் முதலமைச்சரிடம் அளித்த சில கோரிக்கைகளை செய்தியாளர்களிடம் கூறினார்.
அதில், “முதலாவதாக ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை சம்பவத்திற்கு பின் இருக்கும் அனைவரையும் சட்டத்தின் முன் நிற்க வைக்க வேண்டும். இந்த சம்பவத்தில் திட்டமிட்டவர்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தியவர்கள் என அனைவரையும் விரைவில் கண்டறிய தமிழக அரசு முழு முயற்சியில் ஈடுபட வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்து பாஜகவுக்கு ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இதை கருந்தில் கொண்டு பார்த்தால், பாஜகவினர் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, பதற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென சிலவற்றை செய்து வருவதாக தெரிகிறது.
அது மட்டுமின்றி, ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில் பாஜகவைச் சேர்ந்தவர் தான் பேட்டி கொடுத்தார். அதுவும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பேசுவதற்கு முன்பாகவே, சிபிஐ விசாரணை வேண்டுமென தெரிவித்தார். எனவே, ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வாய்ப்பாக பயன்படுத்தி சட்ட ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிட்டு, திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பாஜகவினர் எண்ணுகின்றனர். மேலும், இவ்வாறு சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் கட்சியினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.