சென்னை:திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சிதம்பரத்தில் எம்பி திருமாவளவனும், விழுப்புரத்தில் எம்பி ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகிறனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், 'இது இந்தியா கூட்டணிக்கும், என்டிஏ கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் இல்லை; இது மக்களுக்கும் சங் பரிவார்களுக்கும் இடையேயான தேர்தல் எனக் கூறினார். இதனடிப்படையில் தேர்தல் அமையும். ஆனால் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி தில்லுமுல்லு செய்து ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வாக, இதனை முறியடிக்க மக்கள் 100 சதவிகிதம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வாக்களர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவே ராகுல் காந்தி இரண்டாம் கட்ட நடைபயணம் மேற்கொண்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி பற்றி பாஜக பேசியதே தவறு என்றும் குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாவது அரசியல் கட்சி என்ற இடத்தைப் பிடிக்க துடிப்பதாகவும், இதற்காக பல்வேறு சதிகளை செய்துவருவதாகவும் குற்றம்சாட்டினார்.