சென்னை:விசிகவுக்கும் ராணிப்பேட்டை இளைஞர் விவகாரத்திற்கும் தொடர்பில்லை ஆனால் பாமக நிறுவனரும், அதன் தலைவருமான அன்புமணி ராமதாஸ் விசிகவுக்கு எதிராக வதந்தியைப் பரப்புவது, பதற்றத்தை ஏற்படுத்துகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை முயற்சி செய்த நபரைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த இளைஞர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (ஜனவரி 17) வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்துப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “ராணிப்பேட்டையில் பாமகவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில், பிரேம் என்கிற இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. ஆனால், காவல்துறை அவனை கண்டு கொள்ளாமல் உள்ளது. கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். எங்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:ஜல்லிக்கட்டில் சாதி பார்த்து அனுமதிக்கும் நடைமுறை ஒருபோதும் கிடையாது - மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்!
இந்த நிலையில், அவரது கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும், எந்தவொரு தொடர்புமில்லை. பாமக நிறுவனரும், அதன் தலைவரும் இதனை வைத்து வட மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட முயற்சிப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசிகவுக்கு எதிராக பாமக பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.