தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம்: "குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கமா?" - சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க திருமாவளவன் வலியுறுத்தல்! - VENGAIVAYAL CASE

சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு விடுமோ என்ற அய்யத்தில், இந்தக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது எனவும், தமிழக அரசே வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

வேங்கைவயல் தண்ணீர் தொட்டி, திருமாவளவன்
வேங்கைவயல் தண்ணீர் தொட்டி, திருமாவளவன் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 9:35 AM IST

Updated : Jan 25, 2025, 11:28 AM IST

சென்னை:வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சிபிசிஐடி சார்பில் பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சிபிசிஐடி சமர்ப்பித்திருக்கும் குற்றப்பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும், மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

இதையும் படிங்க:வேங்கைவயல் சம்பவம்: தமிழக அரசு கைகாட்டியுள்ள அந்த மூன்று பேர்!

சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார்? எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன் வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 25, 2025, 11:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details