தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழ்நாடு வந்தார். குறிப்பாக, அவர் பல்லடத்தில் பேசியபோது, 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை. 10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது, என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்து அவர் குறிப்பிடவில்லை.
குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை விமர்சிப்பது, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் கொள்கைகளை பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் பண்ண முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது.
எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அதிமுகவின் ஓட்டை பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும், அதன் வாக்கு சதவீதத்தை சரி செய்ய வேண்டும் என பாஜக கணக்குப் போடுகிறது என்பதை உணர முடிகிறது.
அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை எதிர்க்கிறோம் என்ற பெயரில், பாஜகவிற்கு வாக்களிக்கக்கூடிய நிலை வந்தால், தமிழ்நாட்டிற்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக, அதிமுக தொண்டர்கள் உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக் காட்டுகிறது.