தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1957-ல் கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் கண்டுபிடிப்பு! - THIRUMANGAI ALWAR IDOL

கும்பகோணம் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து 1957-ல் கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை 67 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பத் தருவதற்கு லண்டன் அருங்காட்சியகம் ஒப்புக் கொண்டுள்ளது.

கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை
கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை (Photo Credits - Tamilnadu Idol Wing CID)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 11:16 AM IST

சென்னை: கும்பகோணம் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் கடந்த 1957ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை, லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அருங்காட்சியத்தில் இருந்து 67 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் கண்டு பிடித்ததாக தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மீட்கப்பட்ட சிலை ஓரிரு மாதத்தில் தமிழகம் கொண்டு வரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சௌந்தரராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்து கடந்த 1957-1967ஆம் ஆண்டு கால கட்டத்திற்குள், திருமங்கை ஆழ்வார் சிலை, காளிங்கநர்த்தன கிருஷ்ணர் சிலை, விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி ஆகிய நான்கு சிலைகள், சிலை கடத்தல் கும்பலால் கடத்தி செல்லப்பட்டதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிலைகள் கண்டுபிடிப்பு:புகாரின் பேரில், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், கடத்தப்பட்ட 4 சிலைகளும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக திருமங்கை ஆழ்வார் சிலையானது, லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்திலும், மற்ற காளிங்க நர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஈடுபட்டனர். அதன்படி, திருமங்கை ஆழ்வார் சிலைக்கான ஆதாரங்களை, ஆவணங்களாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்ததாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

திருமங்கை ஆழ்வார் சிலை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:சாமி சிலையை அகற்றிய வருவாய்த்துறை..சாமி ஆடி எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்!

ஆவணங்களின் அடிப்படையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகழக பிரதிநிதி ஒருவர், நேரடியாக தமிழகத்திற்கு வந்து, சிலை தொடர்பான ஆவணங்கள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனை மேற்கொண்டு, திருமங்கை ஆழ்வார் சிலையானது தமிழகத்தைச் சேர்ந்த சிலை தான் என ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு கூறியுள்ளது.

இதையடுத்து, திருமங்கை ஆழ்வார் சிலையை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து, லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், “திருமங்கை ஆழ்வார் சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளது. விரைவில், லண்டனிலிருந்து சிலை தமிழகம் அனுப்பி வைக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 1957ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, ஓரிரு மாதத்தில் லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அருங்காட்சியகத்தில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு, சம்பந்தப்பட்ட கும்பகோணம் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் வைக்கப்பட உள்ளது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details