சென்னை:குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லாரும் செல்லப்பிராணியை வளர்க்க விரும்புகின்றனர். தற்போது பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் உள்ளன. ஆனால் வெளிநாட்டிற்கோ அல்லது தொலை தூர பயணங்களுக்கோ செல்லும் போது, தங்களுக்கு விரும்பமான செல்ல பிராணியை அழைத்து சென்று எவ்வாறு கவனித்துக்கொள்வது என்று கவலை கொள்கின்றனர்.
இதனால் மனமில்லாமல் தங்கள் செல்லப்பிராணியை அக்கம் பக்கத்து வீட்டாரிடமோ அல்லது உறவினர் வீடுகளிலோ விட்டுச் செல்கின்றனர். இனிமேல் அப்படி கவலைக் கொள்ள தேவையில்லை. இது பற்றி விரிவான குறிப்புகளை வழங்குகிறார், செல்லப்பிராணிகளுக்கான போக்குவரத்து சேவை நிறுவனத்தின் இணை நிறுவனர் ஃபைசஸ் இஸ்லாம்.
செல்லப்பிராணியுடனான பயணத்தை திட்டமிடுவதற்கு முன் கால்நடை மருத்துவரை அணுகவும்:உங்கள் பயணத்தில் செல்லப்பிராணிகளை அழைத்து செல்வதாக இருந்தால், அதற்கு முன் செல்லப்பிராணியை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று செல்லப்பிராணியின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவ பரிசோதனை ஆவணத்தின் அடிப்படையில், செல்லப்பிராணியை பயணத்திற்கு அழைத்து செல்லலாமா, வேண்டாமா என்பது குறித்து கால்நடை மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும். பயணத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான செல்லப்பிராணியாக இருந்தாலும் கூட, பயணத்திற்கு முன் கூடுதல் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார சான்றிதழ் தேவைப்படலாம்.
செல்லப்பிராணியின் மருத்துவ ஆவணங்களை எடுத்துச் செல்லவும்:ஒவ்வொரு விமானம் மற்றும் இரயிலில் எடுத்துச் செல்ல சில விதிமுறைகள் உள்ளன. குறிப்பாக செல்லப்பிராணியின் மருத்துவ சான்றிதழ், ஆவணங்கள் தேவை. ஆகையினால் அவற்றை எடுத்துச்செல்ல மறக்காதீர்கள். மேலும் செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழும் அவசியம்.
பயணத்திற்கு நீங்கள் மட்டும் தயாராகாமல், உங்கள் செல்லப் பிராணியையும் தயார்ப்படுத்த வேண்டும்:மனிதர்களைப் போலவே செல்லப்பிராணிகளும் பதற்றத்தை உணரும். திடீரென்று தொலைதூர பயணத்திற்கு அழைத்துச் சென்றால், அதன் மனநிலை மாறும். ஆகவே உங்கள் செல்லப்பிராணிகளை பயணத்திற்கு பழக்கப்படுத்துவது அவசியமானது. அதற்கு உங்கள் செல்லப்பிராணிகளை இரண்டு அல்லது மூன்று முறை பயணமாக அழைத்துச் செல்லலாம். இதன் மூலம் உங்கள் செல்லப்பிராணிகளின் நடத்தையை கவனித்து, அதற்கு தேவையானவற்றை செய்து கொடுக்கலாம்.
செல்லப்பிராணியின் மைக்ரோசிப்பை புதுப்பிக்க வேண்டும்:செல்லப்பிராணிகளை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் போது, அதன் மீது மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருப்பது அவசியம். நீங்கள் உங்கள் செல்லப்பிராணியுடன் சுற்றுலா செல்ல இருந்தாலும், செல்லப்பிராணிக்கு மைக்ரோசிப் செய்ய மறக்காதீர்கள். செல்லப்பிராணியின் மைக்ரோசிப் என்பது ஒரு தனித்துவமான குறியீட்டுடன் இருக்கும். இந்த மைக்ரோசிப்பில் செல்லப்பிராணியின் இனம், வயது, நிறம் மற்றும் உரிமையாளர் விவரங்கள் போன்ற அடிப்படை தகவலள் இருக்கும்.