சென்னை: தமிழகத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து, 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது 2,300 ரூபாய் உயர்த்தப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்தனர்.
இதற்கிடையில், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என முதல்வர் ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்து இருந்தார். இப்போது மூன்று ஆண்டுகள் ஆகியும் வெறும் 2,500 ரூபாய் சம்பளம் உயர்வு மட்டுமே இந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.
இதுகூட கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அன்று பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்தபோது 2,500 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் 10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என சொன்னார். ஆனால் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இப்போது சம்பள உயர்வுக்கு மட்டுமே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு குறித்து ஆணை வெளிவரவில்லை.