தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்.... விஜய் மீது மு.க.ஸ்டாலின் மறைமுகத்தாக்கு! - INDIRECT ATTACK ON VIJAY

கட்சி தொடங்கிய உடன் சிலர் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2025, 1:18 PM IST

சென்னை: கட்சி தொடங்கிய உடன் சிலர் ஆட்சிக்கு வரத்துடிக்கிறார்கள் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ஒரு மண்டலச் செயலாளர், 8 மாவட்ட செயலாளர்கள், 5 ஒன்றிய செயலாளர்கள், 9 சார்பு அணி நிர்வாகிகள், 6 தொகுதி செயலாளர்கள், முன்னாள் எம் பி வேட்பாளர்கள் 3 பேர் மற்றும் முன்னாள் எம் எல் ஏ வேட்பாளர்கள் 6 பேர் உட்பட சுமார் 3,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

திமுகவில் சேர்ந்தவர்களை வரவேற்கும் வகையில் அவர்களுக்கு திமுக உறுப்பினர் அட்டைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், "பல்வேறு பொறுப்புகளில் ஏற்றுக்கொண்டு ஒரு இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நீங்கள் அந்த இயக்கத்தின் தலைமை முறையாக இல்லை என அது நம்பி போவது நமக்கு மட்டுமல்ல தாய் நாட்டுக்கு துரோகமாக போய்விடும் என உணர்ந்து யாரிடத்தில் போய் இருக்க வேண்டும் எங்கு போய் பணியாற்ற வேண்டும் என்ற நிலையில் மிக சிறப்பான முடிவெடுத்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டீர்கள். உங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, துணை முதல்வர் உதயநிதி (Etv Bharat Tamilnadu)

வேடமிட்டு கொண்டு நாடகம் நடத்துவோர்:1949 லேயே கழகத்தை தொடங்கி 1957ல் தான் தேர்தல் களத்திற்கு வந்தோம். ஆனால் சில கட்சிகள் தொடங்கிய உடனே ஆட்சிக்கு வருகிறோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் தான் அடுத்த ஆட்சி நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று சிலர் சுற்றிக் கொண்டிருக்கிறவர்கள். அவர்கள் யார்? என்று அடையாளம் காட்டுவதற்கு நான் விரும்பவில்லை. அவர்கள் பெயரைக் கூறி இந்த மேடைக்குரிய அங்கீகாரத்தை குறைத்துக் கொள்வதற்கு நான் விரும்பவில்லை.

நாங்கள் கட்சியில் இணைபவர்களை மாற்று கட்சி என்றுதான் கூறுகிறோமே தவிர எந்த கட்சி என்று நாங்கள் கூறுவதில்லை. காரணம் உண்மையிலேயே அரசியல் கட்சியாக மக்களுக்கு பாடுபடக்கூடிய கட்சியாக தமிழர்களுக்காக பாடுபடக்கூடிய கட்சியாக இருந்தால் அவர்கள் பெயரை சொல்லலாம். ஆனால் வேடமிட்டு கொண்டு நாடகம் நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்களை பெயர்களை கூற விருப்பமில்லை.
1967-ல் அண்ணா முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னர் ஐந்து முறை முத்தமிழர் கலைஞர் முதலமைச்சராக இருந்தார். தற்போது ஆறாவது முறையாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் பொறுப்பேற்றுள்ளேன்.

ஆளுநரை மாற்ற வேண்டாம்:திராவிட மாடல் ஆட்சி என்று கேட்பவர்களுக்கு எல்லாம் ஒரே பதில் தான், திராவிட மடல் என்று சொன்னாலே இங்கே பலருக்கும் கோபமும் ஆவேசமும் வருகிறது. நீங்கள் சொல்ல சொல்லத்தான் கழகம் மென்மேலும் வளர்ந்து கொண்டே செல்லும். நீங்கள் தரக்குறைவாக பேச பேச தான் அங்கு இருப்பவர்கள் எல்லாம் இங்கே இணைகின்றனர். தற்போது ஆளுநர் தேவையில்லாத வேலை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். நம்மை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார். திராவிடம் என்ற சொல்லிற்கு எதிர்ப்பதமாக பேசிக் கொண்டிருக்கிறார் ஆரியத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார். மதத்தை மையமாக வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் என்று நான் அதிகமாக வருத்தப்படுவதுண்டு.

ஆனால் அவர் பேசட்டும். அப்பொழுது தான் நமக்கு ஆதரவு பெருகிக் கொண்டு இருக்கிறது. அதனால் சிலர் ஆளுநரை மாற்றுங்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் சட்டமன்றத்தில் ஆளுநரை மாற்றங்கள் என்று நாம் தீர்மானம் என்றைக்காவது போட்டிருக்கிறோமா? அடுத்த ஆண்டு ஆளுநர் சட்டமன்றத்திற்கு வரவேண்டும். ஆளுநர் உரை படிக்காமல் அவர் வெளியேற வேண்டும் அதையும் மக்கள் பார்க்க வேண்டும்.

நான் பிரதமரிடத்திலும் அமித்ஷா இடத்திலும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், ஆளுநரை மாற்ற வேண்டாம் அவர் இங்கேயே இருக்கட்டும். அதே மாதிரி யாரை நம்பி வீணாய் போய் விட்டோம் என்று வருத்தப்பட்டு இங்கே வந்திருக்கிறீர்களோ அவர்கள் இன்னும் பேசிக் கொண்டே இருக்கட்டும். அவர்கள் பேசிக் கொண்டிருந்தால் தான் மக்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள். நான் தொடர்ந்து ஒவ்வொரு வாரமாக ஒவ்வொரு மாவட்டத்துக்கு சென்று கொண்டு வருகிறேன். செல்லும் வழிகள் எல்லாம் அனைவரையும் சந்திக்கிறேன். இதெல்லாம் பார்க்கும்போது நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி தொடரும் என உறுதி கூறுகிறேன்.

மக்களுக்கு நினைவூட்டுங்கள்: ஒவ்வொரு வீட்டிலும் நமது ஆட்சிசியின் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு ஒரு பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். அந்தத் திட்டத்திலும் கூட சில குறைபாடுகள் இருக்கிறது அதுவும் இன்னும் சில மாதங்களில் சரியாகிவிடும் என்று துணை முதலமைச்சர் கூறி இருக்கிறார்.

புதுமைப் பெண்கள் என்கிற திட்டத்தின் அடிப்படையில் பள்ளி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் திட்டம். அதேபோல மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் இன்று அனைத்தையும் சிறப்பாக செய்து வருகிறோம். இதைப் பார்த்து பல மாநிலங்களிலும் பல்வேறு நாடுகளிலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற போவதாக கூறுகிறார்கள். மக்களுக்கு நாம் செய்ததை நினைவூட்டினாலே போதும், நிச்சயமாக அவர்கள் புரிந்து கொள்வார்கள். அதற்கு நீங்கள் எல்லாம் துணை புரிய வேண்டும்," என்று தெரிவித்தார்.

மேலும் இதே நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

ABOUT THE AUTHOR

...view details