தேனி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரனை ஆதரித்து, தேனியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 13) பிரச்சாரம் மேற்கொண்டார். தேனி பங்களாமேடு பகுதியில் டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை இருவரும், ஒரே வாகனத்தில் நின்று பிரச்சாரம் செய்தனர்.
அப்போது பிரச்சாரத்தில் பேசிய அண்ணாமலை, "2026 ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் தான் 2024 நாடாளுமன்றத் தேர்தல். தமிழகத்தை ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான், இந்த கூட்டணி அமைந்துள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றுதான், தலைவர்களும் ஒன்றுதான். தொண்டர்கள் தான் வேறு.
டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இரண்டு பேரும் ஒன்றாகச் செயல்படுகின்றனர். பிரதமர் மோடியின் முழு அன்பைப் பெற்றுள்ள வேட்பாளராக டிடிவி தினகரன் இருக்கிறார். தினகரன் வெற்றி பெற்று விட்டால், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்பதால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் இருவரும் இணைந்து தினகரன் பற்றி விமர்சித்துப் பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் பல பிரச்சனைகள் உள்ள நிலையில், அதை பற்றி எல்லாம் ஸ்டாலின் பேச மாட்டார். இந்தியாவிலேயே மத்திய அரசு அதிக வசதி ஏற்படுத்திக் கொடுத்த மாநிலம் என்றால், அது தமிழ்நாடு தான். மத்தியில் உள்ள அரசை வலியுறுத்துவதற்காகத் தான், அதிமுக இருக்கின்றது. மோடியை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற விடாமல் தடுப்பதற்காகத் தான், இந்தியக் கூட்டணி இருக்கின்றது. அவர்களின் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பது கிடையாது.