புதுடெல்லி:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 68 பேர் உயிரிழந்த நிலையில், 161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 24 பேர் வரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்தால் உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காது. அதனால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
முறையான விசாரணை:இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "இனி இதுபோன்ற கள்ளச்சாராய உயிரிழப்புகள் நேரிடாமல் தடுப்பது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி டி.எஸ்.பி. தலைமையில், 50 பேர் கொண்ட காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டு 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்," என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த நவம்பர் 20ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவில், "சமுதாயத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள், தீங்குகள் மதுவால் ஏற்படும் என்பதற்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவங்கள் ஒரு எச்சரிக்கையாக உள்ளன. காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு:மாநில காவல்துறை கண்டும் காணமாலும் இருந்துள்ளதை இச்சம்பவம் தெளிவாக்குகிறது. அதே வேளையில் காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு, சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிபிசிஐடி நடத்திய விசாரணை அறிக்கையை சிபிஐ வசம் 2 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும்,"எனவும் தீர்ப்பளித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், "மனுதாரர்கள் எவரும், காவல்துறை அதிகாரிகளையோ, அரசியல்வாதியையோ, வேறு எந்த அரசு அதிகாரிகளோ இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதன்மைக் குற்றவாளியுடன் கூட்டு சேர்ந்து சதியில் ஈடுபட்டனர் என்று குறிப்பிட்ட நபர்களின் மீது குற்றம் சாட்டவில்லை. இது போன்ற வெறும் அறிக்கையின் அடிப்படையில், எந்தவித ஆதராமும் இல்லாமல் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கூடாது,"என கூறப்பட்டுள்ளது.
சிபிஐ விசாரிக்க தடையில்லை:மாநில அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "இந்த வழக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் பிற பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. எனவே, இந்த வழக்கை சிபிஐ மட்டுமே விசாரணை மேற்கொள்ள வேண்டிய பொருத்தமான அமைப்பாகும். இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. உயர் நீதிமன்றத்தின் மிகவும் நியாயமான தீர்ப்பில் தலையிடுவதற்கு சரியான காரணங்கள் ஏதும் இல்லை," என்று தெரிவித்தனர்.