நெல்லை திமுகவில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூட்டத்தில் நடந்தது என்ன? திருநெல்வேலி:நாடு முழுவதும், ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதன் அடிப்படையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தலைவர்களின் சூறாவளி பிரச்சாரத்தால் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக, நெல்லைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸ்சுக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளையில் திமுக கூட்டணி சார்பில் திசையன்விளை நகரத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம், திசையன்விளையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக நகரச் செயலாளர் ஜான் கென்னடி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், கூட்டத்தில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
சபாநாயகரின் ஆதரவாளர்களைத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும், சிலர் அமைச்சரைத் தாக்க முயன்றதாகவும் பதிலுக்கு அமைச்சர் தரப்பினர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சையின் பின்னணியில் உள்ள உட்கட்சி பூசலாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படும் காரணம் என்னவென்றால், நெல்லை தொகுதியில் போட்டியிட மாவட்ட திமுக அவைத்தலைவர் கிரகாம்பெல், சபாநாயகர் அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, தற்போதைய எம்பி ஞான திரவியம் உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், திமுக தலைமை நெல்லை தொகுதியை திடீரென காங்கிரசுக்கு ஒதுக்கியது. இதனால் சபாநாயகர் உட்பட நெல்லையைச் சேர்ந்த திமுக முக்கிய நிர்வாகிகள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராபர்ட் புரூஸ், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அனுசரித்துச் செல்லாமல் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், இதனால் மேலும் அதிருப்தியான திமுக நிர்வாகிகள் சரிவரத் தேர்தல் பணியாற்றவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நெல்லையில் முகாமிட்டுத் தேர்தல் பணிகளைக் கவனிக்கும்படி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், தனக்குப் பொறுப்பு கிடைத்த உடனே முதல் கட்டமாக நெல்லை ராதாபுரம், திசையன்விளை பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மேலும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப .உதயகுமாரை திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தார். அதே சமயம், சுப.உதயகுமாருக்கு மீனவ கிராமங்களில் பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வருவதாகவும், இதனால் உள்ளூர் திமுக நிர்வாகிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற, சூழ்நிலையில் தான் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (ஏப்.06) காலை திசையன்விளை நகரச் செயலாளர் ஜான் கென்னடியை தொடர்பு கொண்டு தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே இன்று (ஏப்.06) ஆலோசனைக் கூட்டம் திசையன்விளையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக மட்டும் இல்லாமல் காங்கிரஸ், மக்கள் நீதி மையம் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்திற்கு வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிற கட்சியினர் இருப்பதைப் பார்த்து ஜான்கென்னடியிடம் கடிந்ததாகவும், இது திமுக கூட்டம் காங்கிரஸ்காரர்கள் வெளியே போங்கள் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாகவும் இதனால் கூட்டம் தொடங்கிய உடனே சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, நெல்லை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவரும் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்து அமைச்சர் பேசியதாகவும், அதற்கு நகரச் செயலாளர் ஜான் கென்னடியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இதன் காரணமாகக் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராகச் சலசலப்பு ஏற்பட்டது மட்டும் அல்லாது, திமுக கட்சி நிருவாகிகள் ஒருசிலர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க:"கற்பனை உலகில் வாழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" - மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின் வெற்றி உறுதி என வானதி சீனிவாசன் கருத்து!