தூத்துக்குடி:தூத்துக்குடி அண்ணா நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (32). வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபரான இவர் அந்தப் பகுதியில் மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவருக்கும் இவரது தங்கை கணவரான கோவில்பட்டியில் வசித்து வரும் கோபிநாதன் என்பவருக்கும் சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செந்தில்குமார் நேற்று இரவு மெடிக்கல் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அடைத்து விட்டு இரண்டு தெருக்கள் தள்ளி உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் மறைந்திருந்த 6 பேரை கொண்ட கும்பல் அவரை சரமாரியாக ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது நகர காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா, தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.