தேனி:தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே மேலசொக்கநாதபுரம் பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கல்லூரி விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கல்லூரி அரியர் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி கல்லூரி விடுதியில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி கல்லூரியின் விடுதியில் விக்னேஷ் நீண்டநேரமாக காணவில்லை என்பதால் பூட்டி இருந்த கழிவறையை விடுதி காப்பாளர் உடைத்துப் பார்த்தபோது கழிவறையில் அதிக ரத்தங்களுடன் மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து போடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பார்த்த பெற்றோர் மாணவரின் கழுத்து, காது ஆகிய பகுதிகளில் காயங்களும், ஆசனவாய் பகுதியில் ரத்த காயங்களும் இருந்ததால் தங்களது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு, மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டு கழிவறையில் விழுந்ததால் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், மாணவரின் உடலை மீட்கும்போது உடலில் எறும்புகள் கடித்திருந்ததால் காயங்கள் உண்டாகியதாகவும் போலீசார் தரப்பில் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக இறந்த மாணவரின் தாயார் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
போலீசாரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பெற்றோர், மாணவரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கூறி, அவரின் உடலை பெறாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.