தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை பகுதியில் ராம்சுந்தர் என்பவரது தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குளிப்பது வழக்கம்.
இந்த நிலையில், பெரியகுளம் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் - சுப்புலட்சுமி தம்பதியின் மகன் ராஜ்குமார் (வயது 23). மாற்றுத்திறனாளி இளைஞரான இவர் பெரியகுளம் வடகரையில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அவர் கிணற்று அருகே சென்ற போது தவறி உள்ளே விழுந்தாக கூறப்படுகிறது. கிணற்றில் நீரின் அளவு சற்று அதிகமாக இருந்த நிலையில் ராஜ்குமார் எப்படியாவது வெளியே வர முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அவரால் வெளியே வர முடியாத நிலையில் நீரில் முழ்கியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ராஜ்குமாரின் தாய் சுப்புலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்த சென்று மகனை பார்த்துள்ளார். ஆனால் ராஜ்குமார் நீரில் மூழ்கியதை அறிந்த தாய், உடனடியாக பெரியகுளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஆடுகளை கடித்ததால் ஆத்திரம்...தேனியில் நாயை கொன்று வீடியோ வெளியிட்ட நான்கு பேர் கைது!
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் பிற்பகல் 3 மணி முதல் கிணற்றுக்குள் விழுந்த ராஜ்குமாரை தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை. இருப்பினும் தீயணைப்புத்துறையினர் ராஜ்குமாரை கிணற்றுக்குள் தொடர்ந்து தேடியுள்ளனர். இதில் நான்கு மணி நேரம் தேடுதலுக்கு பின், இரவு 7 மணி அளவில் ராஜ்குமாரின் உடலை பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதையடுத்து, பெரியகுளம் வடகரை காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை ஈடுப்பட்டுள்ளனர்.