தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாயாசத்தில் விஷம் வைத்து சிறுமி கொலை; ஆயுள் தண்டனை வழங்கிய தேனி மாவட்ட நீதிமன்றம்! - Girl killed by poisoning case

Theni court: கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால், பாயாசத்தில் விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி செய்ததில் 11 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் முக்கிய நபருக்கு ஆயுள் தண்டனையும், அதற்கு உதவியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விஜி என்ற விஜயராம் மற்றும் ராம்குமார்
விஜி என்ற விஜயராம் மற்றும் ராம்குமார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 1:00 PM IST

தேனி:தேனி மாவட்டம், போடி காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராம்குமார் - செல்வி தம்பதியர், சௌந்தர்யா என்ற ஒரு பெண் குழந்தையும், கிருஷ்ண குபேந்திரன், விக்னேஸ்வரன் என்ற இரண்டு ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு அவரது உறவினரான சுரேஷ் (38) ராம்குமாரிடம் 4 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

கடன் பெற்ற தொகையை ராம்குமார் ஓர் ஆண்டாக சுரேஷிடம் திருப்பிக் கேட்டு வந்துள்ளார். இதனால் சுரேஷ் மற்றும் அவரது உறவினர்களான கீதா (32), விஜி என்ற விஜயராம் (32), காமாட்சி (28) மற்றும் கணேஷ்குமார் (29) ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து, ராம்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் பாயாசத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்து, குடும்பத்தோடு கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2013ஆம் ஆண்டு அவர்களின் திட்டப்படி, பாயாசத்தில் விஷத்தைக் கலந்து, முதலில் ராம்குமாரின் மகளான சௌந்தர்யா என்ற 11 வயது குழந்தைக்கு கொடுத்துள்ளனர். அதன் பின் ராம்குமார், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கலந்த பாயாசத்தைக் கொடுத்துள்ளனர்.

ராம்குமாரின் மனைவி செல்வி, பாயாசம் குடித்த பொழுது ஒவ்வாமை ஏற்பட்டதால் கீழே துப்பி உள்ளார். இதனைத் தொடர்ந்து, பாயாசம் குடித்த அனைவரும் மயங்கி விழுந்த நிலையில், போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, சிறுமி சௌந்தர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக ராம்குமாரின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில், போடி டவுன் காவல் நிலையத்தில் விஷம் கொடுத்து கொலை செய்ததாக சுரேஷ் உள்ளிட்ட அவரது உறவினர்கள் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நேற்று (பிப்.10) இந்த வழக்கு விசாரணையானது முடிவுற்று, சாட்சிகளின் அடிப்படையில் பாயாசத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது நிரூபிக்கப்பட்டதால், முதல் குற்றவாளியாக கருதப்படும் சுரேஷுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 302-இன் கீழ் ஆயுள் தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, அதை கட்ட தவறும் பட்சத்தில், மேலும் ஆறு மாதம் மெய் கால் சிறைத் தண்டனை மற்றும் ஐபிஎசி 307-இன் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம், ஐபிசி 201-இன் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என மூன்று பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், விஷம் கொடுத்து கொலை செய்ய உதவிய விஜயராம் என்ற இளைஞருக்கு ஐபிசி 307-இன் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறும் பட்சத்தில், மேலும் 6 மாத கால சிறை தண்டனையும் விதித்து மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும், இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டவரான கீதா மற்றும் நான்காவது குற்றம் சாட்டப்பட்டவரான காமாட்சி ஆகிய இருவரும் உயிரிழந்து விட்ட நிலையில், ஐந்தாவது குற்றம் சாட்டப்பட்ட நபரான கணேஷ்குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:தருமபுரியில் கூலி வேலைக்குச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் - இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details