தருமபுரி:தருமபுரி அடுத்த ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அருகே வெத்தலகாரன்பள்ளம் பகுதியில், கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமும், 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலமும் கிடப்பதாக அதியமான் கோட்டை காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அழுகியபடி கிடந்த சடலம் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரம் குறித்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து, கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காரை வைத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் (31), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் (21) இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசராணையில், உயிரிழந்தவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பிரேமலதா என்பது தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த மணிகண்டன் தனியார் ஆப் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதியிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் கணவன், மனைவி இருவர் மட்டுமே வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தைச் சார்ந்த தேவராஜ் கொடைக்கானலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது வேலை இல்லாத நிலையில் சொந்த ஊருக்கு வந்து, மணிகண்டன் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அடிக்கடி மணிகண்டனுக்கு தற்காலிக ஓட்டுநராகச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் தேவராஜ், மணிகண்டன் - பிரேமலதா தம்பதி வாரிசற்ற நிலையில் வசதியாக வாழ்ந்து வருவதைப் பார்த்து, இவர்களிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். இதனால் உயிரிழந்த மணிகண்டன் தனது நிறுவனத்தின் மூலம் தனக்கு கோடிக்கணக்கில் பணம் வர வேண்டி உள்ளது. அதனை எடுப்பதற்கு தனக்குத் தெரியவில்லை என்று தேவராஜிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய தேவராஜ், இணையதளத்தில் கைதேர்ந்தவர்களான அவரது நண்பர்களின் உதவியோடு இந்த தனியார் ஆப்பில் இருக்கின்ற பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தேவராஜ் கொடைக்கானலில் வேலை செய்யும் தனது நண்பர்களான அஸ்வின், சபரி (36), பிரவீன் குமார் (33), நந்தகுமார் (27) ஆகியோரை தேனி மாவட்டத்திற்கு வரவழைத்துள்ளார்.
இதையும் படிங்க:சொத்து தகராறில் மகனை அடித்துக் கொலை செய்த தந்தை கைது.. அறந்தாங்கியில் பயங்கரம்!
தொடர்ந்து நண்பர்களோடு மணிகண்டன் வீட்டிற்குச் சென்று நிலம் விற்பனைக்கு இருப்பதாகவும், அதனைப் பார்க்க போலாம் என மணிகண்டனையும், அவரது மனைவியையும் காரில் அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்குச் சென்று மணிகண்டன் மற்றும் அவரது மனைவியிடம் இருந்த செல்போனை வாங்கியுள்ளனர்.
அதன் பிறகு தனியார் ஆப்பில் உள்ள பணத்தை, வேறு ஒருவர் கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவ்வாறு செய்ய இயலாததால் மணிகண்டன் மற்றும் அவரது மனைவியிடம் பின் நம்பர் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்நிலையில், அந்த தம்பதி தங்களுக்கு தெரியாது எனவும், விட்டுவிடுங்கள் எனவும் கூறிய நிலையில், அவற்றை கேட்காமல் கத்தியைக் காட்டி அவர்களிடம் இருந்த 12.5 சவரன் தங்க நகைகளைப் பறித்துள்ளனர்.
மேலும் இவர்களை வெளியில் விட்டால் காவல்துறையில் சிக்கி விடுவோம் என அஞ்சி கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அதன் பிறகு கத்தியால் கணவன்-மனைவி இருவரையும் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தேவராஜ் தனது நண்பர்களோடு இருவரின் சடலத்தையும் காரில் எடுத்துக் கொண்டு, தேனியில் இருந்து தருமபுரிக்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து பகல் என்பதால், கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களை எங்கு வீசுவது என்று தெரியாமல் சுற்றித்திரிந்த நிலையில், மதியம் 2 மணி அளவில் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிப்காட் பகுதிக்குச் சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருவரின் சடலத்தையும் வீசிவிட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கொலை செய்த தேவராஜ், அஸ்வின், சபரி, பிரவீன்குமார், நந்தகுமார் ஆகிய ஐந்து பேரை அதியமான்கோட்டை காவல் துறையினர் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நபராக கருதப்படும் தேவராஜை காவல் துறையினர் கைது செய்ய முயன்ற போது, தப்பித்து ஓட முயற்சி செய்ததில் தவறி கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவலர்கள் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும், இந்தக் கொலை வழக்கில் வேறு யாரேனும் தொடர்பு உள்ளனரா எனவும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்